வீட்டிலிருந்து வேலை எனும் சிறை!
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். வீட்டில் இருந்தே பணியாற்றும் முறையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். வீட்டில் இருந்தே பணியாற்றும் முறையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினார். கரோனா காலத்தைப் போல பெருந்தொற்று காரணங்களுக்காக அவர் இதைச் சொல்லவில்லை மாறாக, நாட்டின் பொருளாதாரம் மற்றும் சர்வதேச நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காக இந்தச் சிக்கன நடவடிக்கை என்று கூறினார்.
கரோனா காலத்தில் ஊரடங்கு அமலில் இருந்தது; தொழில்கள் முடங்கின; முன்களப் பணியாளர்கள் மட்டுமே வேலைக்கு வந்தனர். பள்ளி மற்றும் கல்லூரிகள் இணையவழியில் இயங்கின, மென்பொருள் பொறியாளர்களை என்ன செய்ய? அப்போது உதித்த எண்ணம்தான் "வீட்டிலிருந்தே வேலை செய்வது'. இணைய வழியாகவே அலுவலகப் பணிகளை செய்தனர்; வெற்றிகரமாக இயங்கினார்கள்.
ஆரம்பத்தில் எல்லோரிடமும் இது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இணையம் வழியாகவே அலுவலகக் கூட்டங்கள் நடத்தினார்கள். வீட்டிலிருந்தே வேலை என்றபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். முன்பு ஐந்து நாள்கள் அயராது உழைத்து வார விடுமுறையின்போது வேறு முகமூடி அணிந்து கொண்டார்கள். மன உளைச்சல், பதற்றம் இவற்றைப் போக்க ஒரு வழியைக் கண்டறிந்தார்கள். ஐ.டி. ஊழியர்களின் "பப்' கலாசாரம்தான் அது. ஒரு தனி உலகமாக மாறிவிட்டது. தங்களின் மன அழுத்தத்தைக் குறைக்கிறது என்று காரணம் சொல்லிக் கொண்டார்கள்.
Advertisement
Advertisement
கரோனாவின்போது, வீட்டிலிருந்து வேலை என்பது பெரிய வரப்பிரசாதமாக இருந்தது. குடும்பப் பொறுப்புகளையும், தனிப்பட்ட வேலைகளையும் சமநிலைப்படுத்திக் கொள்ள முடிந்தது. வெளியில் செல்லும் செலவு, அலுவலகத்துக்கு என வாங்கும் உடைகளுக்கான செலவுகள் பெருமளவில் குறைந்தன.
நிறுவனங்களுக்கும் கட்டட வாடகை மின்சாரக் கட்டணம், பராமரிப்புச் செலவுகள் போன்றவை குறைந்தன. அப்போது வீட்டில் இருந்தது பிடித்தது. சூடாக சமைத்துச் சாப்பிட முடிந்தது. குழந்தைகளின் இணையவழிக் கல்வியையும் கவனித்துக் கொண்டார்கள். இரட்டிப்பு மகிழ்ச்சியில் திளைத்தார்கள். "பப்' கலாசாரமும் காணாமல் போனது. நாளடைவில் வீட்டிலிருந்து வேலை அவர்களுக்கு சலித்துப் போனது. தனிமை பிடிக்காமல் போனது; மீண்டும் அலுவலகம் போக ஆசைப்பட்டார்கள்.
நிலைமை சரியானதும் சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை தினமும் வரச்சொல்லிவிட்டனர். சில நிறுவனங்கள் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள்கள் மட்டுமே வரச் சொன்னார்கள். தினமும் வர வேண்டும் என்ற உத்தரவு கிடைத்ததும் நிறைய பேர் உண்மையிலேயே அதை பெரிதும் வரவேற்றார்கள். காரணம், எப்போதும் வீட்டு வேலை இருந்துகொண்டே இருந்தது. அலுவலக நேரம் எனப் பிரித்து அவர்களால் முழுமையாக வேலையில் ஈடுபட முடியவில்லை. குழந்தைகள் தொல்லை செய்தன; மீட்டிங் இருக்கும் போது அழுதன; பெண்கள் தடுமாறிப் போனார்கள்.
குழந்தையைப் பார்த்துக் கொண்ட பெரியவர்களும் கொஞ்சம் ஒதுங்கிக்கொள்ள, பெண்களின் பாடு பெரும் சிரமமாக ஆகியது. சரியான நேரத்துக்கு உணவு உண்ண முடியவில்லை. திடீர் மின்வெட்டு, இணைய வேகம் குறைவது போன்ற சமயங்களில் வேலைகளில் தொய்வு ஏற்பட்டது. சுயக் கட்டுப்பாடும், முறையான நேர நிர்வாகமும் இருந்தால் மட்டுமே வீட்டிலிருந்து வேலை எளிதாக இருந்தது.
ஆனாலும், தினமும் காலையில் புத்துணர்வுடன் வேலைக்குப் போக விரும்பினார்கள். நட்பு வட்டத்துடன் எதையும் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டார்கள். அலுவலகத்துக்குப் போகும் போதுதான், தாங்கள் வேலைக்குப் போவதாக உணர்ந்தார்கள். தேநீர் இடைவேளையை ரசித்தார்கள். அதேபோல மதியம் அனைவரும் சேர்ந்து உணவருந்தினார்கள். வெளியே உணவகத்துக்குச் சென்று சாப்பிடவும் செய்தார்கள். பிறந்த நாள் கொண்டாட்டங்களில் குதூகலித்தார்கள். அழகாக உடுத்திக்கொண்டு போய் தோழிகளை அசரடிக்க வேண்டும் என்றெல்லாம் சின்ன சின்ன ஆசைகள் நிறைய வைத்திருந்தார்கள். வீட்டு விஷயங்கள் முதல் நாட்டு நடப்பு வரை பகிர்ந்து கொண்டார்கள். அங்கே சில ஆழமான புரிதலும், ஆத்மார்த்தமான நட்பும், உறவும் வளர்ந்தன.
வீட்டில் வேலை என்றால் எப்போது வேண்டுமானாலும் மீட்டிங் இருக்கும், சொந்த வாழ்க்கைக்கும் அலுவலக வேலைக்கும் நடுவிலிருந்த கோடு அழிந்து போயிற்று. ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளின் மீது சவாரி செய்து சோர்ந்து போய்விட்டார்கள். வீட்டுக்குள் தனிமை, ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் நண்பர்களிடம் உடனே கேட்க முடியாது. எல்லா வீடுகளிலும் நிசப்தம் இருக்காது, குடும்பத்தினரின் நடமாட்டம், வீட்டில் பேச்சு சப்தம், பக்கத்து விட்டு மிக்ஸி, மோட்டார், நாய் குரைக்கும் சப்தம் எனப் பல சங்கடங்கள் உண்டு.
தலைமைக்கும் இவர்களுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி வந்துவிடுகிறது. அலுவலகத்துக்குப் போனால் அலைச்சல். வீட்டில் இருந்தால் நிம்மதி என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிப்போனது. வெளியுலகத் தொடர்பு இல்லாமல் மனிதனால் வாழ முடியாது. அடித்துப் பிடித்து வேலைக்கு போனாலும் பரவாயில்லை; பல்வேறு மனிதர்களைப் பார்க்கிறோம் என்பதே மகிழ்ச்சி தரும். இப்போது வீட்டிலிருந்தது வேலை என்பதற்கு எவரிடமும் அதற்கு அதிக வரவேற்பில்லை, உற்சாகமில்லை, பூனை தன் குட்டியைக் கவ்விக் கொண்டு போவது போல மடிக் கணினியை தூக்கிக்கொண்டு சமையல் மேடைக்கும் சாப்பாட்டு மேசைக்கும் அலைகிறார்கள். சக ஊழியர்களுடனான தொடர்பு துண்டிக்கப்படுகிறது. அலுவல் தொடர்பான பேச்சுகள் மற்றும் உரையாடல்கள் மட்டுமே நடக்கின்றன.
இந்தியாவிலிருந்து கொண்டு, வெளிநாட்டு நேரத்துக்கு வேலை செய்வது மிகவும் சவாலான விஷயம். மனித உடல் பகலில் வேலை செய்யவும், இரவில் தூங்கவும் வடிவமைக்கப்பட்டது. நடுநிசி வரை விழித்திருக்கிறார்கள். பகல் நேரத்தில் தூங்க முடியாது; வீட்டு வேலைகள் நெரிக்கும். குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட முடியாது. பண்டிகைகள், குடும்ப நிகழ்வுகள், நண்பர்கள், சந்திப்புகள் என அனைத்தும் மாலை அல்லது இரவு நேரம்தான் இருக்கும். அந்த நேரத்தில் இவர்கள் மடிக் கணினியுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள். நள்ளிரவில் சாப்பிடுவது, முறையற்ற நேரத்தில் சாப்பிடுவது, போதிய தூக்கம் இல்லாதது இவர்களின் உடல் நலத்தைப் பாதிக்கின்றன.
ஓர் உணவகத்துக்குச் சென்றிருந்தோம். பக்கத்து மேஜையில் ஒரு குடும்பம் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. குழந்தைகள், பெரியவர்கள் என அவ்வளவு கலகலப்பாக பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஓர் இளம் பெண் மட்டும் மடிக் கணினியில் வேலை செய்துகொண்டு, முள் கரண்டியால் உணவை எடுத்து கொறித்துக் கொண்டு இருந்தாள். அவளால் அந்த உணவை ரசித்து சாப்பிட முடியவில்லை. கவனம் வேலையின் மீதே இருந்தது} பாவம், இப்படித்தான் வீட்டில் இருந்தும் அவர்கள் வேலை செய்கிறார்கள்.
பெண்கள் இந்த நூற்றாண்டில்தான் சுதந்திரமாக இருக்க ஆரம்பித்தார்கள். அழகாக உடுத்தவும், அற்புதமான நட்பு வட்டத்தைப் பெருக்கிக் கொள்ளவும் செய்கிறார்கள். அலுவலகத்தில் அடிக்கடி ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் எனக் களைகட்டும் அவர்களுக்குள் இருக்கும் திறமைகள் பளிச்சிடும் தங்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில் மகிழ்ச்சி அடைந்தார்கள். தோளில் கைப் பையை மாட்டிக் கொண்டு வேலைக்கு கிளம்பும் ஒவ்வொரு பெண்ணும், வெளி உலகில் சந்திக்கும் சவால்கள் ஓராயிரம். ஆனாலும், வெளி உலகத் தொடர்பு அவர்களுக்கு தன்னம்பிக்கையையும், துணிச்சலையும் தந்தது.
ஆகவே, அவர்கள் அலைச்சலையும் சிரமத்தையும் பொருட்படுத்தவில்லை. மீண்டும் வீட்டிலிருந்து வேலை என்பதை அவர்கள் அவ்வளவாக வரவேற்கவில்லை. தூக்கிக் கட்டிய கொண்டையுடன் வீட்டில் உடுத்தும் உடையுடன் மடிக் கணினிமுன் அமர்ந்து பொழுதைக் கழிக்க பிடிக்கவில்லை. பட்டாம்பூச்சி போல சிறகடித்துப் பறக்க ஆசை. அந்த கைப்பை அவர்களின் கனவுகளையும் சுமந்துகொண்டு செல்கிறது. ஆகவே, கூண்டுக்கிளி வாழ்க்கையை அவர்கள் விரும்பவில்லை. அலுவலகம் என்றால் காலையில் போய் மாலையில் திரும்புவதுதான் நடைமுறை வழக்கமாக அந்தக் காலத்தில் இருந்தது. அதன் காரணமாக அனைத்தும் சரியாக இருந்த மாதிரி நமக்குத் தோன்றியது. இக்கால பிள்ளைகள் பாவம் அல்லாடுகிறார்கள். அவர்களின் சிரிப்புக்கும் முகப்பூச்சுக்கும் உதட்டுச்சாயத்துக்கும் பின்னால் பல சிரமங்கள் ஒளிந்துள்ளன.
அலுவலகச் சூழல் மனதுக்கு இதமாகவும், வேலை செய்ய உந்துதலாகவும் அமைந்துவிட்டால் அது சொர்க்கம். அலுவலகம், இரண்டாவது வீடு போன்ற உணர்வைத் தரும். மேலும் ஐ.டி. நிறுவனங்கள் தூய்மையாகவும், ஒழுங்கோடும் அழகோடும் இருக்கும், மேலை நாட்டுக்கு ஒப்பாக இருக்கும், ஆகவே, அங்கு பணிபுரிபவர்கள் அனைவருக்கும் அந்தச் சூழல் மகிழ்ச்சியைத் தரும். தேங்கி நிற்கும் குட்டை போல இல்லாமல் புதிய விஷயங்களை நண்பர்களுடன் கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். "நான் இங்கே வளர்கிறேன்' என்ற பெருமிதம் மட்டுமே ஒருவருக்குப் போதும். வீட்டில் ஓர் அறையில் இறுக்கமான சூழலில் அந்த மகிழ்ச்சி கிட்டாது; இக்கரைக்கு அக்கரை பச்சை!
கட்டுரையாளர்:
பேராசிரியர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.