ஆணாதிக்க மனநிலை மாற வேண்டும்!
பெண்களின் கண்ணியம் காக்கப்படாத சமூகத்தை, நாகரிக சமுதாயமாகக் கருத முடியாது.
காவிரி பிரச்னைக்காக, ஆகஸ்ட் 3-ஆம் தேதி தஞ்சாவூரில் திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது, எனக்கு மிகப்பெரிய மன வலியைத் தந்தது.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை உள்பட 22 மாவட்டங்களின் குடிநீர், 10-க்கும் அதிகமான மாவட்டங்களில் விவசாயம் காவிரி நதியைச் சார்ந்துள்ளது. தமிழ்நாட்டின் வாழ்வாதார பிரச்னைக்காக போராட்டம் நடக்கிறது. அதில், முதல்வர் ஜோசப் விஜய் குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசும்போது, கூட்டத்திலிருந்து, ஒரு நடிகையின் பெயரை திரும்பத் திரும்ப உச்சரிக்கிறார்கள். பொறுப்பான துணை முதல்வர் பதவியில் இருந்தவர், அதைக் கண்டிக்காமல், அருவருக்கத்தக்க வகையில் எதிர்வினையாற்றியதை என்னவென்று சொல்வது?
இதை ஒரு தனிப்பட்ட நடிகை மீதான தாக்குதலாக மட்டும் கடந்து சென்றுவிட முடியாது. பொதுவாழ்வில் இருக்கும், பொதுவாழ்வுக்கு வர விரும்பும் பெண்களை அச்சுறுத்தும் ஒரு பகிரங்க மிரட்டலாகவே பார்க்கிறேன். ஆண்களுக்கு நிகராய் பெண்களும் அனைத்துத் துறைகளிலும் இருக்க வேண்டும் என, அனைவரும் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். ஆனால், அரசியல், திரையுலகம், தொழில் என, பெண்கள் எந்தத் துறையிலும் சற்றே நிமிர்ந்து நின்றால், பாலியல் ரீதியிலான தாக்குதலைத் தொடுக்கிறார்கள். இது ஆண்களின் தன்னம்பிக்கையின்மையையும், அச்சத்தையும் காட்டுகிறது.
Advertisement
Advertisement
இன்று உலகம் எவ்வளவோ மாறி விட்டது. தொழில்நுட்பத்தால் எதையும் செய்ய முடியும் என்ற நிலை வந்துவிட்டது. ஆனாலும்கூட, ஆண்களைப் போல, பெண்களால் இவ்வுலகில் சுதந்திரமாக வாழ முடியவில்லை.
அரசியலில் இருக்கும் ஆண், குடும்பத்தைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. நள்ளிரவு தாண்டியும் வீட்டுக்கு வர முடியும். பல நாள்கள் வீட்டுப் பக்கமே வராமல்கூட இருக்க முடியும். பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள் என்பதுகூட தெரியாது என பெருமை பேசும் பேட்டிகளைப் பார்க்கிறோம். அரசியலில் இருக்கும் பெண்ணுக்கு இது சாத்தியமில்லை.
இரவு தாமதமாகச் செல்ல முடியாது. ஆண் அரசியல் தலைவர்கள் எந்நேரமும், எந்த உடையிலும், யாரையும் சந்தித்து விடலாம். ஆனால், பெண் தலைவர்களால் அது முடியாது. கட்சிப் பணிக்காக வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் செல்லும்போது தங்குமிடம், உணவு என அனைத்திலும் பெரும் நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும். உடல்நலப் பிரச்னை வந்துவிட்டால் அவ்வளவுதான். இப்படி எத்தனை, எத்தனையோ சவால்களைச் சந்தித்துதான் அரசியலில் பெண்கள் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்; அனைத்துத் துறைகளிலும் இப்படித்தான்.
மக்கள்தொகையில் சரி பாதியாக உள்ள பெண்களுக்கு அரசியலிலும், ஆட்சி அதிகாரத்திலும் சமபங்கு கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. வரும் 2029-ஆம் ஆண்டில் நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அமலுக்கு வரவுள்ளது.
இந்த அளவுக்கு பெண்கள் அரசியல் களத்துக்கு வந்த பிறகும் அரசியல் கட்சிகளில் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர செயலாளர் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகளுக்கு பெண்களால் வர முடியவில்லை. பெண் சுதந்திரம், சமூக நீதி பேசும் கட்சிகளில், முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகளில் ஐந்து சதவீதம்கூட பெண்கள் இல்லை.
ஒரு பெண் அரசியல் தலைவரின் கருத்துகளை, நிர்வாகத் திறமையை, கொள்கைகளை விமர்சிப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், பெண் தலைவரின் தனிப்பட்ட வாழ்க்கை, உடலமைப்பு, உடை, குடும்பத்தினர், நண்பர்கள் குறித்து இழிவுபடுத்துவது, கேலி செய்வதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.
பெண் அரசியல் தலைவர்கள் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், அவதூறுகள், பாலியல் ரீதியான இழிவான பதிவுகள் சமூக வலைதளங்களில் எங்கும் நிறைந்துள்ளன. பெண் தலைவர்கள் ஒரு பதிவு போட்டால், கமென்ட்டில் வக்கிரங்களை கொட்டித் தீர்க்கிறார்கள்.
இப்போதும்கூட உதயநிதி பேசியதை பலரும் நியாயப்படுத்துவதைப் பார்க்கிறேன். அவர் என்ன தவறாக பேசி விட்டார் என்று கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் கேட்கிறார்கள். இதற்காக உதயநிதியைக் கைது செய்வதா எனக் கொந்தளிக்கிறார்கள். அதாவது, பெண்களை இழிவுபடுத்துவது தவறு என்பதைக்கூட, பலரால் உணர முடியவில்லை. பெண்கள் இழிவுபடுத்துவது தங்கள் பிறப்புரிமை என்று நினைக்கிறார்கள்.
உதயநிதி கைது செய்யப்பட்டதன் பின்னணியில் தமிழக வெற்றிக் கழகத்துக்கும், முதல்வர் ஜோசப் விஜய்க்கும் வேறு அரசியல் காரணங்கள் இருக்கலாம். ஆனாலும், உதயநிதி பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியது உண்மை. அதற்கு வருத்தம்கூடத் தெரிவிக்காமல், அதை அவர் கடந்து செல்ல நினைப்பது மன்னிக்க முடியாத குற்றம்.
இதற்கு முன்பு இந்தியாவின் பிற மாநிலங்களிலும், தமிழ்நாட்டிலும் எத்தனையோ தலைவர்கள் பெண்களை பாலியல் ரீதியாக இழிவுபடுத்திப் பேசியிருக்கிறார்கள். ஆனால், அதையெல்லாம் அரசியல் கட்சிகளும், சமூகமும் வெறும் கண்டனத்துடன் கடந்து விட்டது.
எந்தத் துறையில் இருந்தாலும் பெண்ணின் கண்ணியம் காக்கப்பட வேண்டும். பெண்களின் கண்ணியமும், மரியாதையும் அரசியலுக்கு அப்பாற்பட்டதல்ல. பெண்களின் கண்ணியம் காக்கப்படாத சமூகத்தை, நாகரிக சமுதாயமாகக் கருத முடியாது. இதை உதயநிதி உள்ளிட்ட அனைவரும் உணர வேண்டும். "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' என்ற மகாகவியின் வரியை நினைவில் கொள்வோம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.