நாடாளுமன்றத்தில் நேதாஜிக்கு மலர் மரியாதை!
நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 123-ஆவது
நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 123-ஆவது பிறந்த நாளையொட்டி, நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு தலைவர்கள் மரியாதை செய்தனர்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் திருவுருவப் படம் நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு மத்திய குடும்ப நலம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் விஜய் கோயல், முன்னாள் துணை பிரதமரும் மக்களவை நெறிகள் குழுத் தலைவருமான எல்.கே. அத்வானி ஆகியோர் மலர் மரியாதை செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் மக்களவை, மாநிலங்களவை இன்னாள், முன்னாள் உறுப்பினர்கள், மக்களவைச் செயலர் ஸ்நேகலதா ஸ்ரீவாஸ்தவா ஆகியோரும் கலந்து கொண்டு நேதாஜி சுபாஸ் சந்திர போஸýக்கு மரியாதை செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு மக்களவைச் செயலகத்தால் ஹிந்தி, ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட நேதாஜியின் வாழ்க்கை குறித்த கையேடு வழங்கப்பட்டது. நாடாளுமன்ற மைய அரங்கில் நேதாஜியின் திருவுருவப் படத்தை 1978, ஜனவரி 23-ஆம் தேதி அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் என்.சஞ்சீவ ரெட்டி திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
குடியரசுத் தலைவர் மரியாதை: இதேபோன்று, தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் திருவுருப் படத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மலர் மரியாதை செய்தார்.