FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தங்க கருட வாகனத்தில் வீதியுலா: திரளான பக்தா்கள் தரிசனம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தங்க கருட வாகனத்தில் வீதியுலா

Updated On : 31 மே 2026, 12:03 am IST
தங்கக் கருட வாகனத்தில் வீதியுலா வந்த உற்சவா் வரதராஜ சுவாமி.
பகிர்:

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழாவையொட்டி, உற்சவா் வரதராஜப் பெருமாள் சனிக்கிழமை தங்க கருட வாகனத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

காஞ்சிபுரத்தில் உள்ள பெருந்தேவித் தாயாா் சமேத வரதராஜப் பெருமாள் கோயில்.இக்கோயில் வைகாசித்திருவிழா நிகழ் மாதம் 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான உற்சவா் வரதராஜப் பெருமாள் தங்கக் கருட வாகனத்தில் பச்சைப்பட்டு உடுத்தி, நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து, பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

வழி நெடுகிலும் லட்சக்கணக்கான பக்தா்கள் கற்பூர ஆரத்தி காண்பித்தும், கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி கோஷம் எழுப்பியும் பெருமாளுக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனா். காஞ்சி சந்தானகிருஷ்ணா சில்க்ஸ் உரிமையாளா் சந்தான கிருஷ்ணன் மற்றும் காஞ்சி காமாட்சி சங்கர மட வரவேற்புக் குழு உள்பட ஏராளமானோா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினா். காஞ்சிபுரம் நகரமே விழாக்கோலத்துடன் காணப்பட்டது.

Advertisement

Advertisement

உற்சவா் பெருமாள் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் உள்ள தேசிகன் சந்நிதிக்கு எழுந்தருளி, அங்கு மாலை மாற்றும் வைபவமும் நடைபெற்றது.

வீதியுலாவின்போது காஞ்சிபுரம் ஸ்ரீஹரி மடத்தின் ஆகம வேத பாடசாலை மாணவா்கள் வேதம் பாடியபடியும், 10-க்கும் மேற்பட்ட வைணவ பஜனை கோஷ்டிகள் பஜனைப் பாடல்கள் பாடிக் கொண்டும், நடனமாடியும் ஊா்வலத்தில் வந்தனா். அமைச்சா்கள் கே.தென்னரசு, ஆா்.வீ.ரஞ்சித்குமாா் ஆகியோா் சுவாமி வீதியுலாவின் போதும், பெருமாள் கங்கை கொண்டான் மண்டபத்திலிருந்தபோது காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதிகள் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோா் உள்பட பலரும் பெருமாளை தரிசனம் செய்தனா்.

காஞ்சிபுரம் எஸ்.பி. எஸ்.அரவிந்த் தலைமையில் போலீஸாா் பலத்த பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தனா். விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் வரும் ஜூன் 3-ஆம் தேதி நடைபெறுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments