21 குழந்தைகள் உயிரிழந்ததாக புகார்: அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் வலியுறுத்தல்
வடக்கு தில்லியில் உள்ளஅரசு மருத்துவமனையில் தொண்டை அழற்சி (டிப்திரியா) தடுப்பு ஊசி இல்லாத
வடக்கு தில்லியில் உள்ளஅரசு மருத்துவமனையில் தொண்டை அழற்சி (டிப்திரியா) தடுப்பு ஊசி இல்லாத காரணத்தால் 21 குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி போலீஸுக்கு தில்லி மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இந்த தொடர்பாக ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால், வடக்கு தில்லி காவல் துறை இணை ஆணையருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள நோட்டீஸில் தெரிவித்திருப்பதாவது:
வடக்கு தில்லி, கிங்ஸ்வே கேம்ப் பகுதியில் உள்ள மஹரிஷி வால்மீகி மருத்துவமனையில் தொண்டை அழற்சி நோயால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இந்த நோயை தடுப்பு ஊசியின் மூலம் சுலபமாக தடுத்துவிடலாம்.
ஆனால், இந்த தடுப்பு ஊசிகளை வடக்கு தில்லி மாநகராட்சி வாங்காததால், கடந்த 9 மாதங்களாக மருத்துவமனையில் தடுப்பு ஊசிகளே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த மருத்துவமனையில் சுகாதார சீர்கேடும் இருந்துள்ளது. தொண்டை அழற்சி நோய் தடுப்பு ஊசிகள் போதிய அளவில் வாங்காத காரணத்தால்தான் இந்த அளவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது தெளிவாகிறது. தடுப்பு ஊசிகளை வாங்க ஒதுக்கப்பட்ட நிதியை வடக்கு தில்லி மாநகராட்சி தவறாக கையாண்டு இருக்கலாம்.
இது கிரிமினல் அலட்சியமாகும். தவறு செய்த அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கையும், அரசு நிதியை தவறாக கையாண்டதாகவும் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை ஜனவரி 31ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும். இல்லையென்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளார்.