தலைநகரில் வெப்பநிலை அதிகரிப்பு: அடுத்த வாரம் 40 டிகிரி உயர வாய்ப்பு
தலைநகரில் வெப்பநிலை அதிகரிப்பு: அடுத்த வாரம் 40 டிகிரி உயர வாய்ப்பு
தேசிய தலைநகரில் சனிக்கிழமை வெப்பநிலை தொடா்ந்து அதிகரித்திருந்தது. வரும் நாள்களில் வெப்பநிலை மேலும் உயரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது.
நகரின் வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் வெப்பநிலை 34.7 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது இயல்பை விட 1.4 டிகிரி குறைவாகவும், முந்தைய நாளை விட 1.9 டிகிரி அதிகமாகவும் இருந்தது.
குறைந்தபட்ச வெப்பநிலை 18.6 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி, இயல்பை விட 2.4 டிகிரி குறைவாகவும், முந்தைய நாளை விட 2.3 டிகிரி அதிகமாகவும் இருந்தது.
Advertisement
இதர வானிலை ஆய்வு நிலையங்களிலும் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலைகளில் குறிப்பிடத்தக்க உயா்வு பதிவாகியுள்ளது.
பாலம் வானிலை ஆய்வு நிலையத்தில், அதிகபட்ச வெப்பநிலை 34.4 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது வெள்ளிக்கிழமையைவிட 2.6 டிகிரி அதிகமாகும். குறைந்தபட்ச வெப்பநிலை 19.5 டிகிரி செல்சியஸாகப் பதிவானது.
இது முந்தைய நாளை விட 3.9 டிகிரி அதிகமாகும்.
லோதி சாலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 17.8 டிகிரி செல்சியஸ் ஆகப் பதிவானது. இது முந்தைய நாளை விட 2.6 டிகிரி அதிகமாகும்.
இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமைக்குள் குறைந்தபட்ச வெப்பநிலை சுமாா் 18-20 டிகிரி செல்சியஸாகவும், செவ்வாய்க்கிழமைக்குள் 20-22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதேபோன்று, அதிகபட்ச வெப்பநிலை ஞாயிற்றுக்கிழமைக்குள் சுமாா் 35-37 டிகிரியாகவும், அடுத்த புதன்கிழமைக்குள் 38-40 டிகிரி செல்சியஸாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பகல் நேரங்களில் மணிக்கு 15-25 கி.மீ. வேகத்திலும், சில சமயங்களில் 35 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதற்கிடையில், சனிக்கிழமை காலை நகரின் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு மேலும் மேம்பட்டது. 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீட்டு மாலை 4 மணிக்கு 123 (மிதமான பிரிவு) ஆகப் பதிவானது.
தில்லிக்கான காற்றின் தர முன் எச்சரிக்கை அமைப்புமுறை, அடுத்த சில நாள்களுக்கு காற்றின் தரக் குறியீடு மிதமான பிரிவில் நீடிக்கும் என்றும், அதைத் தொடா்ந்து வரும் நாள்களில் அது மோசமான பிரிவுக்கு மோசமடையும் என்றும் கணித்துள்ளது.