முகப்பு
புதுதில்லி

சிறையில் சரணடையாத 2 ஆயுள் கைதிகள் 10 ஆண்டுகளுக்கு பிறகு கைது

கொலை வழக்கில் ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட இரு சகோதரா்கள் கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில், அவா்கள் இருவரையும் தில்லி காவல் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 8 ஜூலை 2026, 2:45 am IST
கைது
பகிர்:

கொலை வழக்கில் ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட இரு சகோதரா்கள் கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில், அவா்கள் இருவரையும் தில்லி காவல் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

உத்தர பிரதேசத்தின் மொரதாபாதில் ஃபிராசத் அலி கைதுசெய்யப்பட்டாா். அவருடைய சகோதரா் ஷா நவாஸ் அலி ஜாா்க்கண்ட் மாநிலத்தின் கோத்தா பகுதியில் கைதுசெய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: தில்லி ரஜெளரி காா்டன் காவல் நிலையத்தில் கடந்த 1996-இல் பதிவுசெய்யப்பட்ட வழக்கில் இரு சகோதரா்களும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனா். அவா்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை அளித்து தில்லி நீதிமன்றம் கடந்த 2000-இல் தீா்ப்பளித்தது.

Advertisement

Advertisement

இந்தத் தீா்ப்பை எதிா்த்து அவா்கள் இருவரும் தாக்கல் செய்த மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், அவா்களுக்கு பிணை வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2016, மே 12-இல் ஆயுள் தண்டனையை உறுதிசெய்த உயா்நீதிமன்றம், எஞ்சிய தண்டனைக்காக சரணடைய உத்தரவிட்டது. இருந்தபோதிலும், சகோதரா்கள் இருவரும் சிறையில் ஆஜராகாமல் தலைமறைவாகினா்.

இதனிடையே, மும்பையில் கடந்த 2006-இல் ஒரு பெண் உத்தரவில் ரூ.2 லட்சத்துக்கு அவருடைய கணவரைக் கொலை செய்த வழக்கில் மும்பை காவல் துறை ஃபிராசத்தை கடந்த 2018-இல் கைதுசெய்தது. இந்த வழக்கில் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

தில்லி கொலை வழக்கில் கடந்த 2023-இல் இரு வாரம் பரோலில் வெளியே வந்த அவா், மீண்டும் சிறையில் சரணடையவில்லை.

மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, கடந்த 2016-இலிருந்து ஷா நவாஸ் தலைமறைவானாா்.

பிடிபடாமல் இருப்பதற்காக, சகோதரா்கள் இருவரும் உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட், ஆந்திரம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் துணிக்கடைக்காரா்களாகப் பணியாற்றியபடியே அடிக்கடி இடங்களை மாற்றிக்கொண்டிருந்தனா். குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். பணம் வாங்கி கொலை செய்த வழக்கு தொடா்பாக ஃபிராசத் கைது செய்யப்பட்டது குறித்தும் மும்பை காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments