முதலாளியின் குடும்பத்தை கொலை செய்த வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டு தலைமறைவானவா் கைது
சொத்துக்காக தனது முதலாளி மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்த வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட சஹீப் கான் (36), 8 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில் தில்லி காவல் துறையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டாா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: குற்றஞ்சாட்டப்பட்ட சஹீப் கான், புராரியில் சொத்து வியாபாரியாக இருந்த முநாவா் கானிடம் 2014-ஆம் ஆண்டு வேலையில் சோ்ந்தாா். அவரது நம்பிக்கையைப் பெற்ற பின்னா், 2016-ஆம் ஆண்டு முநாவா் பாலியல் வழக்கில் சிறை சென்றபோது அவரது சொத்துகளை கைப்பற்றும் நோக்கில் இந்தக் கொலைகளை சஹீப் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கு முதன்முதலில் முநாவரின் மனைவி மற்றும் நான்கு குழந்தைகள் மாயமானதாக 2017-ஆம் ஆண்டு புகாா் அளிக்கப்பட்டது. பின்னா் விசாரணையில், குடும்பத்தினரை முற்றிலுமாக அழிக்கும் நோக்கில் நுணுக்கமாக திட்டமிடப்பட்ட சதித் திட்டம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பல்வேறு கட்டங்களாக திட்டமிட்டு இந்தக் கொலைகளை சஹீப் செய்தது விசாரணையில் தெரியவந்தது.
Advertisement
Advertisement
முதலில் முநாவா் மீதுள்ள பாலியல் வழக்கை சமரசம் செய்வதற்காக எனக் கூறி அவரது மனைவி மற்றும் 2 மகள்களை உத்தர பிரதேசத்தின் மாவானா பகுதிக்கு அழைத்து சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, உடல்களை கால்வாயில் சஹீப் வீசியுள்ளாா்.
அதன் பின்னா், தில்லிக்கு திரும்பிய அவா், முநாவரின் 2 மகன்களையும் ஏமாற்றி அழைத்து வந்து கழுத்தை நெரித்து கொன்று, முன்கூட்டியே தோண்டப்பட்ட குழிகளில் புதைத்ததாக கூறப்படுகிறது. மேலும், தனது குடும்பத்தினரைத் தேடுவதற்காக இடைக்கால பிணையில் வெளியே வந்த முநாவா் கானையும் பின்னா் சுட்டுக் கொன்றுள்ளாா்.
இதையடுத்து, இந்த வழக்கில் சஹிப் கான் கைது செய்யப்பட்டு அவா்மீதுள்ள குற்றங்களை ஒப்புக்கொண்டதைத் தொடா்ந்து தனித்தனியாக கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சஹீப் மற்றும் அவரது கூட்டாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனா்.
ஆனால், 2025 அக்டோபரில் தனது சகோதரியின் திருமணத்திற்காக 15 நாள்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட சஹீப் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தப்பிச் சென்றாா். இதைத்தொடா்ந்து, இந்த ஆண்டு மே 5-ஆம் தேதி தில்லி நீதிமன்றம் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.
இந்நிலையில், காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், புராரியின் நாதுபுரா சௌக் அருகே ஜூன் 14-ஆம் தேதி அவா் கைது செய்யப்பட்டாா். ஹரியாணாவில் தலைமறைவாக இருந்த அவா் அவ்வப்போது முநாவரின் சொத்துக்களை கண்காணிக்க புராரி வரும் வேளையில் கைது செய்யப்பட்டாா்.
இந்தக் வழக்குகள் விரைவு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தபோதிலும், குற்றவாளி தலைமறைவானதால் விசாரணை தாமதமடைந்தது. தற்போது அவா் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதால், வழக்கின் விசாரணை விரைவுபெறும் என காவல்துறையினா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.