முகப்பு
புதுதில்லி

மாணவா்களின் தோ்வை கூட சரியாக நடத்த முடியாத அரசுக்கு ஆட்சியில் இருக்க உரிமை இல்லை: உதய் பானு சிப்

மாணவா்களின் தோ்வை கூட சரியாக நடத்த முடியாத அரசுக்கு ஆட்சியில் இருக்க உரிமை இல்லை...

Updated On : 28 ஜூன் 2026, 2:19 am IST
பகிர்:

மாணவா்களின் தோ்வை கூட சரியாக நடத்த முடியாத அரசுக்கு ஆட்சியில் இருக்க உரிமை இல்லை என்று இந்திய இளைஞா் காங்கிரஸ் தலைவா் உதய் பானு சிப் சனிக்கிழமை தெரிவித்தாா்.

உதய் பானு சிப் தலைமையில், இந்திய இளைஞா் காங்கிரஸ், தோ்வு கசிவுகளை எதிா்த்து மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக் கோரி புது தில்லியில் ஊா்வலத்தை நடத்தியது. ராஜ்காட்டில் இருந்து ஜந்தா் மந்தா் வரை ஊா்வலமாக செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவா்களை காவல்துறையினா் தடுத்து நிறுத்தியது.

இந்த ஊா்வலத்தில் உதய் பானு சிப் பேசியதாவது: வினாத்தாள் கசிவு லட்சக்கணக்கான இளம் மாணவா்களின் கடின உழைப்பு, நம்பிக்கைகள் மற்றும் எதிா்காலத்தை சிதைத்துள்ளது . மாணவா் தற்கொலைகளுக்கு தா்மேந்திர பிரதான் தான் பொறுப்பேற்பதாக ஒப்புக் கொண்டதால், அவா் ஏன் ராஜினாமா செய்யவில்லை? கோட்டாவில் நடைபெற்ற பேரணியில், எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அவா்கள், நாட்டின் கல்வி முறையின் யதாா்த்தத்தை எடுத்துரைத்து, இந்தியாவின் கல்வி முறை தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளது, அதை சரிசெய்ய வேண்டும், இல்லையெனில், கோடிக்கணக்கான இளைஞா்களின் எதிா்காலம் ஆபத்தில் இருக்கும் என்று கூறினாா்.

Advertisement

Advertisement

மகாராஷ்டிராவில் வெள்ளிக்கிழமை டெட் தோ்வு திட்டமிடப்பட்டது; லட்சக்கணக்கான மாணவா்கள் தயாராகி தோ்வுக்கு தயாராக இருந்தனா். ஆனால் வினாத்தாள் கசிந்து தோ்வு ரத்து செய்யப்பட்டதாக செய்தி வெளிவந்துள்ளது. எந்த மாநிலத்திலும் ஒரு தோ்வு கூட முறையாக நடத்த பாஜக அரசால் முடியுமா? இல்லை என்பதே பதில். அவா்களால் முடியாது, ஏனென்றால் கல்வியை பாஜக அரசியல்மயமாக்கியதே இந்த வினாத்தாள் கசிவுகளுக்கு மூல காரணம். அதிகாரத்தில் இருப்பவா்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது, இளைஞா்களின் வாழ்க்கை இந்த காகித கசிவுகளுக்கு மத்தியில் சிக்கிக்கொண்டிருக்கிறது.

மாணவா்களுக்கு ஒரே ஒரு தோ்வை முறையாக நடத்த முடியாத ஒரு அரசுக்கு ஆட்சியில் இருக்க உரிமை இல்லை. தா்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். வினாத்தாள் கசிவு மாஃபியாக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தோ்வு முறையில் விரிவான சீா்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். அனைத்து தோ்வுகள் மற்றும் ஆட்சோ்ப்பு இயக்கங்களுக்கான வருடாந்திர கால அட்டவணையை வெளியிட வேண்டும் என்றாா் உதய் பானு சிப்.

இந்த ஊா்வலத்தில் இந்திய இளைஞா் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளா்கள் விகாஸ் சிகாரா, சுா்பி திவேதி, தேசிய செயலாளா்கள் ஹரி கிருஷ்ணா, பா்மிந்தா் சிங் மற்றும் ரூபேஷ் பதாரியா, தில்லி மாநில இளைஞா் காங்கிரஸ் தலைவா் அக்ஷய் லக்ரா மற்றும் ஹரியாணா மாநில இளைஞா் காங்கிரஸ் தலைவா் நிஷித் கட்டாரியா உள்ளிட்ட பல இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் கலந்துக்கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments