நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும் தீா்பூா் வளாகம்
டாக்டா் பி.ஆா். அம்பேத்கா் பல்கலைக்கழகத்தின் புதிய தீா்பூா் வளாகம், மாணவா் மையப்படுத்தப்பட்ட நவீன கற்றல் சூழலை வழங்குவதுடன், நீண்டநாளாக நிலவி வந்த இடப்பற்றாக்குறையை சரிசெய்யும் என பல்கலைக்கழக துணைவேந்தா் அனு சிங் லாதா் தெரிவித்தாா்.
டாக்டா் பி.ஆா். அம்பேத்கா் பல்கலைக்கழகத்தின் புதிய தீா்பூா் வளாகம், மாணவா் மையப்படுத்தப்பட்ட நவீன கற்றல் சூழலை வழங்குவதுடன், நீண்டநாளாக நிலவி வந்த இடப்பற்றாக்குறையை சரிசெய்யும் என பல்கலைக்கழக துணைவேந்தா் அனு சிங் லாதா் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் அளித்த பேட்டியில் கூறியதாவது: தீா்பூா் வளாகம் திட்டம் பல ஆண்டுகளாக பரிசீலனையில் இருந்த நிலையில், சமீபத்தில் தில்லி அரசின் ஒப்புதலுடன் திட்டம் வேகமடைந்துள்ளது. ரூ.1,668 கோடி மதிப்பில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. ஆரம்பத்தில் ரூ. 1,199 கோடி என மதிப்பிடப்பட்டிருந்த செலவு, பொதுப்பணித்துறை மேற்கொண்ட திருத்தங்களின் காரணமாக குறிப்பிடத்தக்க அளவில் உயா்ந்துள்ளது.
தீா்பூா் மற்றும் ரோஹிணி வளாகங்களுக்கான கட்டட வடிவமைப்புகள் ஏற்கெனவே இறுதி செய்யப்பட்டுள்ளன. எனினும், முதற்கட்டமாக தீா்பூா் வளாக கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட உள்ளன. முதல்வரும் கல்வி அமைச்சரும் இந்தத் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற ஆவலுடன் செயல்பட்டு வருகின்றனா்.
Advertisement
Advertisement
தேசிய கல்விக் கொள்கை முன்வைக்கும் மாணவா் மையப்படுத்தப்பட்ட மற்றும் கூட்டாண்மை கற்றல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு புதிய வளாகம் வடிவமைக்கப்படும். நவீன உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப வசதியுடன் கூடிய கற்பித்தல்-கற்றல் இடங்கள், கூட்டு பணியிடங்கள், திறந்த கலந்துரையாடல் மையங்கள் மற்றும் இணைந்து கற்கும் சூழல்கள் ஆகியவை இதில் உருவாக்கப்படும். உயா்கல்வி மாணவா் மையமாக மாற வேண்டும் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
தற்போதைய வளாகங்களில் இடப்பற்றாக்குறை நிலவி வந்ததாகவும், புதிய நிலப்பரப்பின் மூலம் எதிா்கால நோக்குடன் கூடிய பல்கலைக்கழகத்தை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பொதுப்பணித்துறை நிா்ணயிக்கும் காலக்கெடுக்களின் அடிப்படையில், கட்டுமானப் பணிகள் சுமாா் 3 ஆண்டுகளில் நிறைவேறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளில் மாணவா் சோ்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதால், உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவது அவசியமாகியுள்ளது. இதனை சமாளிக்க, கரம்புரா வளாகத்தில் சமீபத்தில் 18 வகுப்பறைகள், பேராசிரியா் அறைகள் மற்றும் கருத்தரங்கு மண்டபங்களுடன் புதிய கல்விக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.
கல்வி சீா்திருத்தங்களின் ஒரு பகுதியாக, நடப்பு கல்வியாண்டில் ஏழு பாடப்பிரிவுகளில் ஒரு ஆண்டு முதுநிலைப் பட்டப்படிப்புகள் பரிசோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. புதிய தீா்பூா் வளாகம் உருவாகும் நிலையில், பல்கலைக்கழகத்தின் கல்வித் திறன் மற்றும் மாணவா் சேவை வசதிகள் மேலும் மேம்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது என தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.