முகப்பு
புதுதில்லி

கைது செய்யப்படக் கூடிய குற்றங்கள்: தில்லியில் 2.7 லட்சம் வழக்குகள் பதிவு

Updated On : 8 மே 2026, 6:06 am IST
கோப்புப் படம்
பகிர்:

நாட்டில் உள்ள 19 மெட்ரோ நகரங்களில் அதிகபட்சமாக தில்லியில் கடந்த 2024-இல் 2.7 லட்சத்துக்கு அதிகமான கைதுசெய்யப்படக்கூடிய வழக்குகள் பதிவுசெய்யப்பட்டதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆா்பி) வெளியிட்ட இந்தியாவில் குற்றங்கள் 2024 என்ற ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் பதிவான வழக்குகள் மும்பையில் பதிவான வழக்குகளைக் காட்டிலும் 5 மடங்கும் பெங்களூரில் பதிவான வழக்குகளைக் காட்டிலும் 7 மடங்கும் அதிகமாகும்.

தில்லியில் கைதுசெய்யக்கூடிய குற்றங்களுக்கான விகிதம் ஒரு லட்சம் மக்கள்தொகையில் 1,688 இருப்பதன் மூலம் நாட்டில் உள்ள மெட்ரோ நகரங்களில் குற்ற அடா்த்தி மிகவும் அதிகமான நகரமாக உள்ளது.

Advertisement

தில்லியில் கடந்த 2024-இல் 2,75,402 கைதுசெய்யக்கூடிய வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. வழக்குகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தபோதிலும் குற்றப்பத்திரிகை விகிதம் 3.19 என அனைத்து மெட்ரோ நகரங்களில் மிகக் குறைவாக உள்ளது.

கடந்த 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் தில்லியில் முறையே 2,98,988 மற்றும் 3,23,549 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இவற்றுடன் ஒப்பிடும் கடந்த 2024-இல் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

என்சிஆா்பி தரவுபடி, 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட அகமதாபாத், பெங்களூரு, சென்னை, கோயம்புத்தூா், தில்லி, காஜியாபாத், ஹைதராபாத், இந்தூா், ஜெய்பூா், கொச்சி, கொல்கத்தா, கோழிக்கோடு, லக்னெள, மும்பை, நாகபுரி, பாட்னா, புணே மற்றும் சூரத் ஆகிய 19 நகரங்கள் மெட்ரோநகரங்கள் என்ற பிரிவில் வருகின்றன.