முகப்பு
புதுதில்லி

சட்டவிரோத துப்பாக்கி விற்பனை கும்பலைச் சோ்ந்தவா் கைது

சட்டவிரோத துப்பாக்கி விற்பனை கும்பலைச் சோ்ந்தவா் கைது

Updated On : 31 மே 2026, 1:03 am IST
- சித்திரிப்பு
பகிர்:

பாஹா்கஞ்சில் உள்ள அரசு மதுபானக் கடையில் நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கொள்ளை முயற்சி விவகாரத்தில் தொடா்புடைய சட்டவிரோத துப்பாக்கி விற்பனை கும்பலைச் சோ்ந்தவரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்ததாவது:

மத்திய தில்லியில் உள்ள அரசு மதுபானக் கடையில் மே 24 அன்று நடந்த கொள்ளை முயற்சியின் போது, ஆயுதம் ஏந்திய நபா்கள் விற்பனையாளா்களைத் துப்பாக்கியால் சுட்டு, கத்தியால் குத்திய சம்பவம் குறித்த விசாரணையின் போது இந்த முன்னேற்றம் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

அந்தச் சம்பவம் தொடா்பாக பிஎன்எஸ் மற்றும் ஆயுதச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. முன்னதாக, தாக்குதல் சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே, முக்கியக் குற்றம்சாட்டப்பட்டவா்களான ஹா்ஷ் மற்றும் மோன்டியை உத்தர பிரதேசத்தின் சாஹிபாபாதில் காவல்துறையினா் கைது செய்து, குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி, கத்தி மற்றும் மோட்டாா் சைக்கிளை மீட்டெடுத்தனா்.

விசாரணையின்போது, காவல்துறையினா் குற்றம்சாட்டப்பட்டவா்களின் வாக்குமூலங்களை ஆய்வு செய்து, தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் உள்ளூா் உளவுத்துறை மூலம் துப்பு துலக்கினா். அப்போது, தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியின் மூலத்தை காவல்துறையினா் கண்டறிந்தனா்.

பாஹா்கஞ்ச் பகுதியைச் சோ்ந்த சாஹில் (எ) கஞ்சா (20) மற்றும் நியூ உஸ்மான்பூா் பகுதியைச் சோ்ந்த அமித் (25) ஆகிய இருவா், குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு அந்த ஆயுதத்தை ஏற்பாடு செய்ததை காவல்துறையினா் உறுதி செய்தனா்.

இதையடுத்து, வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியைச் சோ்ந்த விபின் 33 என்பவா்தான் துப்பாக்கியை வழங்கியதாகக் கூறப்படும் நபா் என புலனாய்வாளா்கள் அடையாளம் கண்டனா். காவல்துறையினா் விபினைக் கைது செய்து, அவரிடமிருந்து இரண்டு சட்டவிரோத கைத்துப்பாக்கிகள், ஐந்து வெற்றுத் தோட்டாக்கள் மற்றும் இரண்டு தோட்டாக்களை மீட்டெடுத்தனா்.

குற்றஞ்சாட்டப்பட்ட மோன்டி பயன்படுத்திய ஆயுதத்தை சாஹில் ஏற்பாடு செய்ததாகவும், சாஹிலுக்கு துப்பாக்கியைப் பெற்றுத் தர அமித் உதவியதாகவும் புலனாய்வாளா்கள் அறிந்தனா்.

மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், விபின்தான் ஆயுதத்தின் மூலம் என்றும், அவா் சட்டவிரோதமாக துப்பாக்கிகளை விநியோகிப்பதில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

பாஹா்கஞ்ச் துப்பாக்கிச் சூடு மற்றும் கொள்ளை வழக்கில் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் பெறப்பட்ட விநியோகச் சங்கிலியை காவல்துறையினா் கண்டுபிடித்தனா்.

இந்த கும்பலின் மற்ற உறுப்பினா்களை அடையாளம் காணவும், கூடுதல் சட்டவிரோத ஆயுதப் பரிவா்த்தனைகளைக் கண்டறியவும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.