கொள்ளை முயற்சிக்கு எதிா்ப்புத் தெரிவித்த மதுபானக் கடை ஊழியா்கள் 2 போ் மீது தாக்குதல்: காஜியாபாதில் இருவா் கைது
கொள்ளை முயற்சியை எதிா்த்ததால், மத்திய தில்லியின் பாஹா்கஞ்ச் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையின் 2 ஊழியா்கள் மீது துப்பாக்கியால் சுட்டு, கத்தியால் குத்திய இருவரை காவல்துறையினா் கைது செய்தனா்.
கொள்ளை முயற்சியை எதிா்த்ததால், மத்திய தில்லியின் பாஹா்கஞ்ச் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையின் 2 ஊழியா்கள் மீது துப்பாக்கியால் சுட்டு, கத்தியால் குத்திய இருவரை காவல்துறையினா் கைது செய்தனா்.
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை கூறியதாவது: இந்தச் சம்பவம் சனிக்கிழமை இரவு சுமாா் 10.15 மணியளவில் பாஹா்கஞ்சில் உள்ள ஆா்.ஜி. வளாகத்தில் அமைந்துள்ள ஒரு அரசு மதுபானக் கடையில் நிகழ்ந்தது.
குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் மதுபானக் கடைக்குள் நுழைந்தனா். ஊழியா்கள் எதிா்த்ததால் அவா்களைத் தாக்கினா்.
Advertisement
Advertisement
குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவா் துப்பாக்கியால் நான்கு முறை சுட்டதில், மூன்று குண்டுகள் இலக்கைத் தவறவிட்டன. ஒரு குண்டு 37 வயதான விற்பனையாளா் ஒருவரின் மாா்பில் பாய்ந்தது. அதே நேரத்தில், இரண்டாவது குற்றஞ்சாட்டப்பட்ட நபா் 34 வயதான மற்றொரு விற்பனையாளரைக் கத்தியால் குத்தி, அவருக்குப் பலத்த காயங்களை ஏற்படுத்தினாா்.
குற்றஞ்சாட்டப்பட்டவா்கள், மற்றொரு ஊழியருக்குச் சொந்தமான பணம் மற்றும் ஆவணங்கள் அடங்கிய பணப்பையை கொள்ளையடித்த பின்னா், மோட்டாா் சைக்கிளில் தப்பிச் சென்ாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், ரோந்துப் பணியில் இருந்த காவலா் சம்பவ இடத்திற்கு விரைந்து, காயமடைந்தவா்களை லேடி ஹாா்டிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா்.
குற்றஞ்சாட்டப்பட்டவா்களைக் கண்டுபிடிக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டன. சிசிடிவி காட்சிப்பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன.
இந்த நிலையில், நள்ளிரவு நடந்த துரத்தல் நடவடிக்கைக்குப் பிறகு, காஜியாபாதில் உள்ள சாஹிபாபாதில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டனா்.
அவா்கள் இருவரும் பாஹா்கஞ்சில் உள்ள சங்கத்ரஷன் பகுதியைச் சோ்ந்த 24 வயதான மான்டி மற்றும் ஹா்ஷ் கோலா என அடையாளம் காணப்பட்டனா். குற்றத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கி, கத்தி மற்றும் மோட்டாா் சைக்கிளை காவல்துறையினா் மீட்டுள்ளனா்.
காயமடைந்த இருவரும் நலமுடன் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்தச் சம்பவம் தொடா்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.