முகப்பு
கன்னியாகுமரி

சுப்பிரமணிய சிவா நினைவு தினம்: உருவப் படத்துக்கு மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவின் 93ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி வரலாற்றுக் கூடத்தில் அவரது உருவப்

Updated On : 24 ஜூலை 2018, 12:49 am IST
பகிர்:

சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவின் 93ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி வரலாற்றுக் கூடத்தில் அவரது உருவப் படத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன் திங்கள்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்திய சுதந்திரத்துக்கு பாடுபட்ட தமிழக தலைவர்களுள் முக்கியமானவர் சுப்பிரமணிய சிவா. திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் 4.10.1884இல் பிறந்த அவர் சுதந்திரத்துக்காக பல்வேறு தேசியத் தலைவர்களுடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டார். தொழுநோயால் பாதிக்கப்பட்ட அவர் 23.7.1925இல் தனது 41ஆவது வயதில் இறந்தார். அவரது 93ஆவது நினைவுதினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. 
கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள வரலாற்றுக் கூடத்தில் சுப்பிரமணிய சிவாவின் உருவப் படத்துக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன் தலைமையில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏ.எம்.டி. செல்லத்துரை, ஜார்ஜ் வாஷிங்டன், சோரிஸ், நெப்போலியன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 
 பின்னர் குமரிஅனந்தன் செய்தியாளர்களிடம் கூறியது: இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு முக்கியப் பங்கு வகித்தவர் சுப்பிரமணிய சிவா. ஆங்கிலேயர்களின் அடக்கு முறைக்கு எதிராக குரல் கொடுத்ததால் பல ஆண்டுகள் சிறையில் தனது வாழ்க்கையை கழித்த அவர் தனது 41-ஆம் வயதில் உயிர் நீத்தார். 
தர்மபுரி மாவட்டம், பாப்பரப்பட்டி கிராமத்தில் அனைத்து ஜாதி மற்றும் மதத்தினர் வழிபடும் வகையில் பாரதமாதாவுக்கு கோயில் எழுப்பவேண்டும் என்பது அவரின் நீண்ட நாள் கனவாக இருந்தது. இதனை நிறைவேற்றும் வகையில் கடந்த 41 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தேன். இதற்காக 7 முறை பாதயாத்திரை சென்றுள்ளேன். 
இதுதொடர்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து மனு அளித்தேன். எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அவர் பாரதமாதாவுக்கு கோயில் எழுப்புவதாக உறுதியளித்தார்.  தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இதற்காக ஐந்து முறை சந்தித்துப் பேசினேன். 
அதனடிப்படையில் பாப்பரப்பட்டியில் பாரதமாதா கோயில் அமைக்க தமிழக அரசு ரூ. 1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments