தடைக்காலம் நிறைவு: குமரி மேற்கு கடற்கரைப் பகுதியில் கடலுக்குச் செல்ல தயாராகும் மீனவர்கள்
கன்னியாகுமரி மேற்கு கடல் பகுதியில் மீன்பிடித் தடைக்காலம் நிறைவடையும் நிலையில் உள்ளதால், ஆக. 1ஆம் தேதியில் இருந்து
கன்னியாகுமரி மேற்கு கடல் பகுதியில் மீன்பிடித் தடைக்காலம் நிறைவடையும் நிலையில் உள்ளதால், ஆக. 1ஆம் தேதியில் இருந்து கடலுக்கு செல்வதற்கு விசைப்படகு மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.
மேற்கு கடல் பகுதியில் மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் கிழக்கு கடல் பகுதிக்குள்பட்ட சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மட்டும் விசைப்படகுகளில் மீன்பிடித் தொழில் நடைபெற்று வருகிறது.
மேற்கு கடல் பகுதிக்குள்வரும் குளச்சல், தேங்காய்ப்பட்டினம், முட்டம் ஆகிய மீன்பிடித் துறைமுகங்களில் கடந்த ஜூன் 1ஆம் தேதியில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. 60 நாள்கள் அமலில் உள்ள இந்த மீன்பிடித் தடைக்காலத்தால் 3 மீன்பிடி துறைமுகங்களிலும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுக தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. நாட்டு படகில் மட்டும் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.
வருகிற 31ஆம் தேதி மேற்கு கடல் பகுதியில் மீன்பிடித் தடைக்காலம் நிறைவடையவுள்ள நிலையில், ஆக. 1ஆம் தேதியில் இருந்து மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். விசைப்படகுகள் கடலுக்கு செல்லவுள்ள நிலையில் மீன்பிடித் துறைமுகங்கள் தற்போதே களைகட்ட தொடங்கியுள்ளன.
படகுகளின் வலைகளை சீரமைத்தல், படகின் இரும்பு ரோப்களை பழுதுபார்த்தல், மீன்பிடி உபகரணங்களை சரிசெய்தல் மற்றும் பிற பராமரிப்புப் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இரு மாதங்கள் ஓய்வுக்கு பின்னர் கடலுக்கு செல்லும் மீனவர்கள், அதிக மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
இதுகுறித்து குளச்சலை சேர்ந்த மீனவர் அந்தோணி கூறியது: மீனவர்களின் சிரமத்தை போக்க, மீன்பிடித் தடைக்காலத்தின் போது வழங்கப்படும் நிதியுதவியை, அரசு அதிகரித்து வழங்க வேண்டும்.
குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தை பொறுத்தவரை கடலுக்கு சென்றுவிட்டு ஒரு வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட நாள்கள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்து விட்டு கரைதிரும்புவோம். விசைப்படகில் 10 பேருக்கு மேல் மீனவர்கள் சென்று தொழில் செய்து வரும் நிலையில் போதிய வருவாய் கிடைத்து வந்தது. அனைத்து மீன்பிடி தடைக்காலத்திற்கு பின்பும் ஆழ்கடலில் அதிகளவில் பிடிபடும் மீன்களை போல் நிகழாண்டும் மீன்கள் கூடுதலாக கிடைக்கும் என நம்புகிறோம்.
மீன்பிடித் தடைக்காலம் நிறைவு பெற உள்ள நிலையில், விசைப்படகுகளை தயார் செய்வது, பழுதான வலைகளுக்கு பதில் புதிய வலைகளை மாற்றுவது உள்ளிட்டப் பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளோம் என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.