திருக்கோயில் பணியாளர்கள் தர்னா
குமரி மாவட்ட திருக்கோயில் பணியாளர்கள், பணிக்கொடை மற்றும் வருங்கால வைப்பு நிதியினை சீரமைக்க
குமரி மாவட்ட திருக்கோயில் பணியாளர்கள், பணிக்கொடை மற்றும் வருங்கால வைப்பு நிதியினை சீரமைக்க வலியுறுத்தி சுசீந்திரத்தில் செவ்வாய்க்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
சுசீந்திரம் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு குமரி மாவட்ட சிஐடியு ஆலய ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.
குமரி மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள 490 கோயில்களில் பணிபுரியும் ஊழியர்களுகளை சில்லறை செலவின அனாமத்துக்களாக அறநிலையத்துறை நிர்வாகம் கணக்கிட்டு இதர முதுநிலை திருக்கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லையாம். மாவட்டத்தில் பணிபுரியும் அலுவலகம் மற்றும் கோயில் ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் கோயில் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமே வழங்கப்படுகிறது.
மேலும், சென்னை ஆணையர் அலுவலகத்திற்கு இந்து அறநிலையத்துறை குமரிமாவட்ட நிர்வாகம் குமரிமாவட்டத்தில் பணிபுரியும் ஆலய ஊழியர்களின் எண்ணிக்கை வெறும் 15 பேர் மட்டுமே என தவறான தகவலை அளித்துள்ளதாம்.
ஆலய ஊழியர்களுக்கு பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி சீரமைக்கப்பட வேண்டும், ஆண்டு ஊதிய உயர்வு நிலுவையுடன் வழங்க வேண்டும், முதுநிலை திருக்கோயிலின் பணியாளர்களுக்கு இணையான ஊதியமும், தகுதியும் ஆலய ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
முன்னாள் எம்.பி. ஏ.வி.பெல்லார்மின், சிஐடியு நிர்வாகி வல்சகுமார், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் கிறிஸ்டோபர், ஆசிரியர் கூட்டமைப்பு நிர்வாகி நாகராஜன், மூட்டா நிர்வாகி கலை செல்வன், பொதுத் தொழிலாளர் சங்க செயலர் சுகுமாரன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலர் பி.ராஜூ, மீன்தொழிலாளர் சங்க கூட்டமைப்பு மாநிலத் தலைவர் ஜி.செலஸ்டின், இந்திய வங்கி ஊழியர் சங்க செயலர் சாகுல் ஹமீது, சிஐடியூ மாவட்டத் தலைவர் பி.சிங்காரன், மாவட்டச் செயலர் கே.தங்கமோகன் ஆகியோர் பேசினர். அஜிகுமார் நன்றி கூறினார்.