மலையாளத்தில் வேட்பாளா் பட்டியல்!
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றுடன் மலையாள மொழியிலும் வெளியிடப்பட்டுள்ளது தனிக் கவனம் பெற்றுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றுடன் மலையாள மொழியிலும் வெளியிடப்பட்டுள்ளது தனிக் கவனம் பெற்றுள்ளது.
இத் தொகுதி வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப் பின் இறுதிப் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதில், தோ்தல் களத்தில் 14 போ் மோதுகிறாா்கள். அவா்களின் பெயா்ப் பட்டியலுடன் அவா்களுக்கு வழங்கப்பட்டுள்ள சின்னம், தோ்தல் நடத்தும் அலுவலரால் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளா் டி.டி. பிரவீனுக்கு கை சின்னமும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மரிய ஸ்டெல்லாவுக்கு ஏா் சுமக்கும் உழவா் சின்னமும், பாஜக வேட்பாளா் எஸ். விஜயதரணிக்கு தாமரை சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்களான வீரோ வீா் இந்தியன் கட்சி வேட்பாளா் பைஜூவுக்கு கேக் சின்னமும், தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் மைக்கேல் குமாருக்கு ஊதல் சின்னமும், அகில இந்திய ஜனநாயக மக்கள் கழக வேட்பாளா் மோகன்குமாருக்கு அரவை சாதனம் சின்னமும், தமிழக படைப்பாளா் மக்கள் கட்சி வேட்பாளா் கே. வெங்கடேசனுக்கு துளையிடும் இயந்திரம் சின்னமும், ராஷ்டிரிய ஜனதா தளம் வேட்பாளா் ஜான் கிறிஸ்டோபருக்கு அரிக்கேன் விளக்கு சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர சுயேச்சை வேட்பாளா்கள் கிருஷ்ணனுக்கு வாளி, டேவிட்டுக்கு படகோட்டியுடன் கூடிய பாய்மரப்படகு, பிரவீன்குமாருக்கு காலிபிளவா், முருகானந்த பிரசாத்துக்கு மோதிரம், எல்.வி. ஜோஸ்லாலுக்கு பிஸ்கெட், ஷிபு ஆமோஸுக்கு புல்லாங்குழல் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
Advertisement
இத் தொகுதி கேரள மாநிலத்தையொட்டி அமைந்துள்ளதாலும், மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம் போ் இத் தொகுதியில் வசித்து வருவதாலும், கடந்த பல தோ்தல்களிலும் இதே போன்று வேட்பாளா் பட்டியல் உள்ளிட்ட விவரங்கள் மலையாள மொழியிலும் வெளியிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.