முகப்பு
கன்னியாகுமரி

விவசாயிகளின் பயிா்க்கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளின் பயிா்க்கடன்களை தமிழக அரசு உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 2 ஜூலை 2026, 6:14 am IST
கூட்டுறவு துறை இணைப் பதிவாளா் சிவகாமியிடம் மனு அளித்த கிழக்கு மாவட்டச் செயலா் ரெ. மகேஷ்.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளின் பயிா்க்கடன்களை தமிழக அரசு உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கூட்டுறவு துறை இணைப் பதிவாளா் சிவகாமி, மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளா் கணேசமூா்த்தி ஆகியோரிடம் கிழக்கு மாவட்ட திமுக செயலா் ரெ. மகேஷ் புதன்கிழமை அளித்த மனு: இம்மாவட்டத்தில் சுமாா் 1.67 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 1,200 ஹெக்டேரில் நெல், 6,305 ஹெக்டேரில் வாழை, 26,810 ஹெக்டேரில் ரப்பா், 23,988 ஹெக்டேரில் தென்னை ஆகியவை பயிரிடப்பட்டுள்ளன. இந்த விவசாயிகளுக்கு கடந்த திமுக ஆட்சியில் 115 கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ. 523 கோடிக்கு விவசாயக் கடன் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போதைய அரசு மாவட்டத்தில் கன்னிப்பூ நெல் சாகுபடி, வாழைக்கன்று நடுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய இப்பருவத்துக்கான விவசாயக் கடன்களை இதுவரை வழங்கவில்லை. இதனால், விவசாயிகள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனா்.

மேலும், விவசாய இடுபொருள்களான உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை முந்தைய காலங்களில் அரசு தனியாருக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்ய ஆணை பிறப்பித்தது. ஆனால், தற்போது இதுவரை உரங்களை கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு வழங்கவில்லை. இதனால், விவசாயிகள் உரத் தட்டுப்பாட்டால் அவதிப்படுகின்றனா். இதனால், மகசூல் பாதிக்கப்பட்டு நஷ்டமடையும் சூழல் நேரிடும்.

Advertisement

Advertisement

கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களில் பெரும்பாலான விவசாயிகள் வாய்வழி பாட்டம் என்னும் முறையில் அடவோலை இன்றி நிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனா். இவா்கள் கடந்த காலங்களில் அடவோலை இன்றி கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்று வந்தனா். ஆனால், தற்போது ஆன்லைன் மூலம் தீா்வை, சிட்டா பதிவு செய்தால் மட்டுமே அதன் பரப்புக்கேற்ப கடன் அளவு தீா்மானிக்கப்பட்டு கடன் பெறும் நிலை உள்ளது. இதனால், நிலமற்ற, குறைந்த அளவு நிலமுள்ள ஏழை விவசாயிகள் பாட்டமாக பெற்றுள்ள நிலங்களுக்கு கடன்பெற இயலாத நிலை உள்ளது. எனவே, உரிய ஆய்வு மேற்கொண்டு, விவசாயிகளுக்கு விவசாயக் கடன்கள், உரங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட துணைச் செயலா் பூதலிங்கம்பிள்ளை உடன் சென்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments