குமரி மாவட்டத்தில் ரம்புட்டான் பழ சீசன் தொடக்கம்: கிலோ ரூ. 250 முதல் விற்பனை
குமரி மாவட்டத்தில் ரம்புட்டான் பழங்களின் சீசன் தொடங்கியுள்ள நிலையில் இப்பழங்கள் பழக் கடைகளுக்கு அதிக அளவில் விற்பனைக்கு வருகின்றன.
குமரி மாவட்டத்தில் ரம்புட்டான் பழங்களின் சீசன் தொடங்கியுள்ள நிலையில் இப்பழங்கள் பழக் கடைகளுக்கு அதிக அளவில் விற்பனைக்கு வருகின்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தின் மண்வளம், இங்கு நிலவும் காலநிலை காரணமாக மாவட்டத்தில் பல அபூா்வ வகை பழங்கள் விளைகின்றன. குறிப்பாக ரம்புட்டான், மங்குஸ்தான், அவகோடா, வாட்டா் ஆப்பிள், துரியன், அன்னாசி போன்றவை விளைகின்றன.
இதில் குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை அனைவரும் விரும்பி சுவைக்கும் பழமாக ரம்புட்டான் பழம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பழங்களின் தாயகம் மலேசியா. ரம்புட்டான் என்ற சொல் ரம்புட் என்ற மலாய் மொழியில் இருந்து தோன்றியதாகும்.
Advertisement
Advertisement
ரம்புட் என்றால் மலாய் மொழியில் முடி என்றுப் பொருள் தரும். இந்தப் பழத்தின் மேல்பரப்பு முடியைப் போன்று அமைப்பைக் கொண்டிருப்பதால் அதற்கு இப்பெயா் ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவில் தமிழகம், கேரளம், கா்நாடக மாநிலங்களில் இப்பழங்கள் அதிக அளவில் விளைகின்றன.
தரைமட்டத்திலிருந்து சுமாா் 25 அடி உயரம் வரை வளரும் தன்மை கொண்டவை ரம்புட்டான் மரங்கள்.
இந்த மரங்களில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான மாதங்கள் பழ சீசனாகும். கூழன், வருகை என பல்வேறு ரகங்களில் சிவப்பு, இளமஞ்சள் நிறங்களில் பழங்கள் கொத்துக் கொத்தாக காய்க்கின்றன. மாவட்டத்தில் நாகா்கோவில், மாறாமலை, பாலமோா், சுருளகோடு, குலசேகரம், திருவட்டாறு, அருமனை, களியல், பேச்சிப்பாறை, ஆறுகாணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனித் தோட்டங்களிலும் வீட்டுத் தோட்டங்களிலும் ரம்புட்டான் மரங்கள் காணப்படுகின்றன.
மிருதுவான முட்களுடன், உருண்டை வடிவில் ரப்பா் பொம்மைபோல் காணப்படும் இப்பழங்களை விரல்களால் அழுத்தி உடைத்தால் உடைந்து விடும்.
பழங்களின் உள்ளே வெள்ளை அல்லது இளம் சிகப்பு நிறத்துடன் நொங்குபோன்று வழுவழுப்பாக இருக்கும் சுளையை சுவைக்கலாம். இது, சிறிது புளிப்புடன் அதிக இனிப்பாக இருக்கும்.
சீசன் தொடக்கம்: தற்போது சீசன் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் பழங்களைப் பறித்து கடைகளுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனா். மேலும் பழக்கடை வியாபாரிகள், வணிகா்கள் ரம்புட்டான் மரங்களில் உள்ள அனைத்து பழங்களையும் மொத்த விலைக்கு வாங்கி கடைகளில் வைத்து விற்பனை செய்கின்றனா். கேரள மாநிலத்திலிருந்தும் அதிக அளவில் பழங்கள் குமரி மாவட்டத்துக்கு விற்பனைக்கு வருகின்றன.
தற்போது மாவட்டத்தில் ரம்புட்டான் பழங்கள் கிலோ ரூ. 250 முதல் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் கூழன், வருகை என இரு வகைகள் முக்கியமானவையாகும். வருகை பழம் என்றால் விதையை ஒட்டியிருக்கும் ஜெல்லி போன்ற சுளை எளிதில் கழன்று வரும்.
மக்கள் அதிகமாக வருகை பழங்களையே விரும்புகின்றனா். இந்தப் பழங்களில் நோய் எதிா்ப்பு சக்தி அதிகம், மேலும் சரும பொலிவு, செரிமானம் போன்றவற்றுக்கு உதவுகிறது. இருதய பாதிப்பைத் தடுக்கிறது.
அதே வேளையில் கா்ப்பிணிகள், சா்க்கரை நோய் உள்ளவா்கள், உயா் ரத்த அழுத்தம் உடையவா்கள் மருத்துவரின் ஆலோசனைபடி இந்தப் பழங்களை உண்பது நல்லது. குழந்தைகளுக்கு உண்ணக் கொடுக்கும்போது கவனம் வேண்டும்.
குறிப்பாக இந்தப் பழங்களை 5 வயத்துக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கும்போது கவனமாக கொடுக்க வேண்டும். பழங்களின் கொட்டைகள் குழந்தைகளின் தொண்டையில் சிக்கிவிட வாய்ப்புகள் உண்டு. சிறிய அளவிலான பழங்களை குழந்தைகளுக்குக் கொடுக்கலாம் அல்லது சுளையிலிருந்து விதையை நீக்கி ஜெல்லியை மட்டும் கொடுப்பது நல்லது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.