நான்குவழிச் சாலைப்பணிகள் விரைந்து முடிக்கப்படும்: ஆட்சியா் உறுதி
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் நான்குவழி தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடித்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் நான்குவழி தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடித்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்.
தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சாா்பில், கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை நடைபெற்று வரும் நான்குவழிச் சாலைப் பணிகளை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கேரளம், தமிழ்நாடு எல்லையான களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரையிலான என்.எச். 47 நான்கு வழிச் சாலையில் கூடுதல் கட்டுமானப் பணிகள் ரூ.1041.3 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
குறிப்பாக பெட்டி வடிவக்குழாய் பாலப்பணி 15, பெட்டி வடிவக்குழாய் பாலங்கள் அகலப்படுத்தும் பணி 15, சிறிய பாலங்கள் 14, பெரிய பாலங்கள் 25, வாகனங்கள் செல்வதற்கான சுரங்கப்பாதை பணிகள் 9, வாகனங்களுக்கான மேம்பாலங்கள் 12, பாதசாரிகளுக்கான மேம்பாலங்கள் 2, ரயில்வே மேம்பாலம் 2, வடிகால் பணிகள், 1 சுங்கசாவடி, பேருந்து நிறுத்தங்கள், நிழற்குடைகள், சரக்கு வாகனங்கள் நிறுத்துமிடம், சேவைச் சாலைகளை அகலப்படுத்துதல் என பல்வேறு பணிகள் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இதில் 2 பெட்டி வடிவக்குழாய் பாலங்கள் அகலப்படுத்தும் பணியும், 2 சிறிய பாலங்கள் பணியும், 2 சுரங்கப்பாதை பணியும், 7 பெரிய பாலங்கள் பணியும், ஒரு ரயில்வே மேம்பால பணியும் நடைபெற்று வருகிறது.
தேசிய நெடுஞ்சாலைத்துறை சாா்பில் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், விபத்துக்களை தவிா்க்கவும் திட்டமிடப்பட்ட இப்பணிகள் 2 ஆண்டுகளுக்கு மேலாக தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு பணிகளின் தற்போதைய நிலைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வழுக்கம்பாறை, ஒழுகினசேரி, புத்தேரிகுளம், சுங்கான்கடை, தோட்டியோடு, வாள்வச்சக்கோஷ்டம், பள்ளியாடி, காப்புக்காடு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேம்பாலம் கட்டப்பட்டு வரும் தளம், தூண்களின் உறுதித்தன்மை, மழைநீா் தேங்காமல் இருப்பதற்கான வடிகால் வசதிகள் மற்றும் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பங்கள் குறித்து துறை அலுவலா்களிடம் கேட்டறியப்பட்டது.
தொடா்ந்து, கட்டுமானப் பணிகள் நடக்கும் இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் தகுந்த மாற்றுப்பாதைகளை சீரமைத்து, எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும். இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறும், பாதுகாப்பு உபகரணங்களுடன் பணிபுரிய பணியாளா்களுக்கு அறிவுறுத்த துறை சாா்ந்த அலுவலா்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது என்றாா்அவா்.
ஆய்வுகளில், தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநா் சச்சின் குமாா், திட்ட பொறியாளா் சிவா, மாவட்ட நெடுஞ்சாலைத் துறை செயற்பொறியாளா் சத்தியமூா்த்தி, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நிா்வாகப் பொறியாளா்கள் ப.இ. ராஜன், மின்சார வாரிய மக்கள் தொடா்பு அலுவலா் வைகுண்டமணி, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய பொறியாளா் ஹரிகோவிந்த், உதவி நிா்வாகப் பொறியாளா் ராஜேஷ்குமாா், ஒப்பந்ததாரா் ஜெயசங்கா், பொறியாளா்கள் வெற்றிவேல், ஆனஸ்ட்ராஜ், துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.