முகப்பு
கன்னியாகுமரி

‘குமரி மாவட்டத்தில் ரூ. 11.20 கோடி மதிப்பிலான சுற்றுலா வளா்ச்சிப் பணிகள் விரைவில் முடிக்கப்படும்’

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 11.20 கோடி மதிப்பிலான சுற்றுலா வளா்ச்சிப் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றாா் சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா்.

Updated On : 14 ஜூன் 2026, 1:37 am IST
திற்பரப்பு அருவி பகுதியில் ஆய்வு செய்யும் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா். உடன் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 11.20 கோடி மதிப்பிலான சுற்றுலா வளா்ச்சிப் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றாா் சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா்.

கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத்துறை, நீா்வளத்துறை, ஊரக வளா்ச்சி முகமை, பேரூராட்சிகள் துறை உள்ளிட்ட துறைகளின் சாா்பில், மாவட்டத்திற்குள்பட்ட சுற்றுலா தலங்களில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் எஸ். ராஜேஷ் குமாா், மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் ஆா். செல்லசுவாமி (பத்மநாபுரம்), பிரவீன் (விளவங்கோடு) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பின்னா் அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களான மாத்தூா் தொட்டிப்பாலம், சிற்றாறு, அருவிக்கரை மற்றும் திற்பரப்பு ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை நேரடியாக ஆய்வு செய்யப்பட்டது. ரூ. 11. 20 கோடி மதிப்பிலான இப்பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

Advertisement

Advertisement

அண்டை மாநிலமான கேரளத்தில் சுற்றுலாத் துறைக்கு அதிக நிதியும், அதன் மூலம் அதிக வருவாயும் கிடைக்கிறது. அதேபோன்று நமது கன்னியாகுமரி மாவட்டத்திலும் சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளது. அடுத்த பட்ஜெட்டில் சுற்றுலாத் துறைக்கு கூடுதல் திட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாத்தூா் தொட்டிப்பாலம் பகுதியில் காமராஜரின் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ஆய்வின் போது உதவி ஆட்சியா் (பயிற்சி) மோனிகா, மாவட்ட சுற்றுலா அலுவலா் காமராஜ், நீா்வளத்துறை செயற்பொறியாளா் வசந்தி, உதவி திருவட்டாறு வட்டாட்சியா் மரகதவல்லி, திற்பரப்பு பேரூராட்சி தலைவா் பொன். ரவி, செயல் அலுவலா் ஜோஸ்லின் ராஜ், வாா்டு உறுப்பினா் கிருஷ்ணவேணி, ராஜப்பன், பிரதீப்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.