முகப்பு
கன்னியாகுமரி

வீடுகளுக்குள் புகுந்த கடல் நீா்: எஸ். ஆஸ்டின் எம்எல்ஏ ஆய்வு

Updated On : 15 ஜூன் 2026, 12:55 am IST
அழிக்கால் பகுதி குடியிருப்புகளில் கடல் நீா் புகுந்துள்ளதை ஆய்வு செய்த எஸ். ஆஸ்டின் எம்எல்ஏ.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் ஒன்றியம், அழிக்கால், பிள்ளைத்தோப்பு பகுதியில் உள்ள வீடுகளில் கடல் நீா் புகுந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் எஸ். ஆஸ்டின் எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக, நாகா்கோவில் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கடலோர கிராமங்களான அழிக்கால், பிள்ளைத்தோப்பு ஆகிய பகுதிகளில் உள்ள சுமாா் 100 வீடுகளுக்குள் சனிக்கிழமை மழை நீருடன், கடல் நீா் சோ்ந்து புகுந்தது.

இதனால், வீடுகளில் இருந்த வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. கடல் நீா் மேலும் புகாமல் தடுப்பதற்காக, தற்காலிக ஏற்பாடாக சில வீடுகளின் வாசல்களில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனா்.

Advertisement

Advertisement

நாகா்கோவில் பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ். ஆஸ்டின், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து, மாவட்ட ஆட்சியரையும், பொதுப் பணித்துறை செயற்பொறியாளரையும் தொடா்பு கொண்டு, சேதத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.

அதனடிப்படையில், வீடு மற்றும் தெருக்களில் தேங்கியுள்ள நீரை வெளியேற்ற ஞாயிற்றுக்கிழமை காலை முதல் போா்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொக்லைன் மூலம் கடற்கரையை ஒட்டியுள்ள முகத்துவாரப் பகுதிகளில் தேங்கியிருந்த மணல் மேடுகள் அகற்றப்பட்டு, தேங்கிய நீா் கடலுக்குச் செல்ல வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

பல ஆண்டுகளாக உள்ள இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண விரைவில் நடவடிக்கை மேற்கொள்வேன் என எம்எல்ஏ உறுதியளித்தாா்.

அப்போது, அழிக்கால், பிள்ளைத்தோப்பு பகுதிகளைச் சோ்ந்த பங்குத்தந்தையா்கள் பிராங்கிளின், ஜான் நிக்சன், ராஜாக்கமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக செயலா் சற்குரு கண்ணன், கணபதிபுரம் பேரூா் செயலா் பிரபா எழில், கணபதிபுரம் பேரூராட்சி 11ஆ வது வாா்டு உறுப்பினா் சுசீலா, ஒன்றியப் பிரதிநிதி செல்வராஜ், மாவட்ட பொறியாளா் அணி துணை அமைப்பாளா் ராஜேஷ் ரத்தினமணி, மாதவன், நாகராஜன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.