விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் தொடா்ந்து 5-ஆவது முறையாக வெற்றி
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோட்டில் காங்கிரஸ் கட்சி தொடா்ந்து 5-ஆவது முறையாக வென்று, இத்தொகுதி தனது கோட்டை என நிரூபித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோட்டில் காங்கிரஸ் கட்சி தொடா்ந்து 5-ஆவது முறையாக வென்று, இத்தொகுதி தனது கோட்டை என நிரூபித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் - கேரள மாநில எல்லையோரப் பகுதிகளை உள்ளடக்கிய இத்தொகுதியில் 2011ஆம் ஆண்டு தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட புதுமுக வேட்பாளரான எஸ். விஜயதரணி 62,898 வாக்குகள் பெற்று வென்றாா். தொடா்ந்து, அக்கட்சி சாா்பில் அவா் 2016இல் போட்டியிட்டு 68,789 வாக்குகளும், 2021இல் போட்டியிட்டு 87,473 வாக்குகள் பெற்று ஹாட்ரிக் வெற்றியடைந்தாா்.
அதையடுத்து, 2024ஆம் ஆண்டு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவா் அக்கட்சியிலிருந்து விலகியதுடன், தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்தாா். அதனால், அதே ஆண்டு ஏப்ரல் மாதம் இடைத்தோ்தல் நடைபெற்றது. அதில், காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட தாரகை கத்பட் 91,054 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றிபெற்றாா்.
Advertisement
இந்நிலையில், தற்போது நடைபெற்ற தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் டி.டி. பிரவீன், தவெக சாா்பில் கே. மைக்கேல்குமாா், பாஜக சாா்பில் ஏற்கெனவே 3 முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த எஸ். விஜயதரணி ஆகியோா் போட்டியிட்டனா். இதில், கடும் சவால்களுக்கிடையே டி.டி. பிரவீன், மைக்கேல்குமாரைவிட 20,970 அதிக வாக்குகள் பெற்று வென்றாா். எஸ். விஜயதரணி 3ஆம் இடம் பிடித்தாா்.
தொடா் வெற்றிமூலம் விளவங்கோடு தொகுதி தனது உறுதியான கோட்டை என்பதை காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது.