சுந்தரனார் பல்கலை.யில் ஆசிரியர்களுக்கான இறகுப்பந்து போட்டி
திருநெல்வேலியை அடுத்த அபிஷேகப்பட்டியில், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்
திருநெல்வேலியை அடுத்த அபிஷேகப்பட்டியில், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், பல்கலைக்கழக பல்வேறு துறைகளின் ஆசிரியர்களுக்கான இறகுப்பந்து போட்டிகள் நடைபெற்றன.
போட்டியின் தொடக்க விழாவுக்கு மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் முன்னாள் செயலர் டி. ராமசாமி தலைமை வகித்தார். துணைவேந்தர் கி. பாஸ்கர் வாழ்த்திப் பேசினார். பதிவாளர் சே. சந்தோஷ்பாபு முன்னிலை வகித்தார்.
தனிநபர் ஆண்கள் பிரிவில் பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி ஆசிரியர் டீ. பிரவீன் முதலிடமும், நாகர்கோவில் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் ஆ. டேனியல் பேரின்பராஜ் 2ஆம் இடமும் பெற்றனர்.
பெண்கள் பிரிவில் திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் ஆ. ஹமர் நிஷா முதலிடமும், கன்னியாகுமரி அன்னை வேளாங்கண்ணி கல்லூரி உடற்கல்வி இயக்குநர் ஆனிஷ் மேரி 2ஆம் இடமும் பிடித்தனர்.
இரட்டையர் ஆண்கள் பிரிவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி பேராசிரியர்கள் பி. ஆர்தர் டேனியல், ஆ.பு. வின்சலி ஜெபகர் ஆகியோர் முதலிடமும், அதே கல்லூரியின் ஏ. ராபின் பேரின்ப ஸ்மித், ஊ. சாம்சன் ஆகியோர் 2ஆம் இடமும் பிடித்தனர். இரட்டையர் பெண்கள் பிரிவில் கன்னியாகுமரி அன்னை வேளாங்கண்ணி கல்லூரி ஆசிரியைகள் ததேயா, ஆனிஷ் மேரி ஆகியோர் முதலிடமும், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வாசுகி, கிருஷ்ணவேணி ஆகியோர் 2ஆம் இடமும் பிடித்தனர்.
நிறைவு விழாவில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக கலைத் துறைத் தலைவரும் சமூகவியல் துறைப் பேராசிரியருமான சு. மருதகுட்டி பரிசு வழங்கிப் பேசினார். ஏற்பாடுகளை விளையாட்டு மைய இயக்குநர் பேராசிரியர் செ. துரை செய்திருந்தார்.