தனியார் மருத்துவமனைகளில் 54% மகப்பேறு சிசேரியன்தான்!
தனியார் மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சை மகப்பேறு விகிதம் அதிகரிப்பு குறித்து...
நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சை (சிசேரியன்) மூலமாக நடைபெறும் பிரசவங்கள் அதிகரித்திருப்பதாக தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்புப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
2023 - 2024 ஆம் ஆண்டில் நாடு முழுவதுமான தனியார் மருத்துவமனைகளில் 54 சதவிகித மகப்பேறுகள், அறுவைச் சிகிச்சை மூலமாகவே நடந்திருப்பதாகத் தரவுகள் கூறுகின்றன.
இவற்றில் மேற்கு வங்க மாநிலத்தில் தனியார் மருத்துவமனைகளில் 87.7 சதவிகிதமும், தெலங்கானாவில் 84 சதவிகிதமும், ஆந்திர பிரதேசத்தில் 66 சதவிகிதமாகவும் உள்ளன.
Advertisement
Advertisement
2004 - 2005இல் 8.5 சதவிகிதமாக இருந்த அறுவைச் சிகிச்சை மகப்பேறுகள், 2015 - 2016இல் 17.2 சதவிகிதமாகவும், 2019 - 2021இல் 21.5 சதவிகிதமாகவும் அதிகரித்தது.
இருப்பினும், தனியார் மருத்துவமனைகளைவிட அரசு மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சை மகப்பேறுகள் குறைவாகவே உள்ளது. 2005 - 2006இல் அரசு மருத்துவமனைகளில் 15.2 சதவிகிதம் என்ற நிலையிலிருந்து, 2023 - 2024இல் 16.9 சதவிகிதமாக மட்டுமே உயர்ந்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் தனியார் மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சை மகப்பேறுகள் 90 சதவிகிதமாகவும், அரசு மருத்துவமனைகளில் 49 சதவிகிதம் வரையிலும் உள்ளது. 80 சதவிகித மகப்பேறுகள் அரசு மருத்துவமனைகளில் நடந்தாலும், அவற்றில் பாதிக்கும் மேல் அறுவைச் சிகிச்சை மூலமே நடக்கின்றன.
தென்னிந்திய மாநிலங்களிலும் அரசு மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சை மகப்பேறு விகிதம் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் 39 சதவிகிதத்துக்கு அதிகமாகவும், ஆந்திரத்தில் 38 சதவிகிதமாகவும், கர்நாடகத்தில் 34 சதவிகிதமாகவும், தெலங்கானாவில் 48 சதவிகிதமாகவும் உள்ளன.
இருப்பினும், பிகார் (13%), ஜார்க்கண்ட் (16%), மத்திய பிரதேசம் (16%) உள்ளிட்ட மாநிலங்களில் அறுவைச் சிகிச்சை மகப்பேறுகள் விகிதம் குறைவாகவே உள்ளது.
10 முதல் 15 சதவிகித அளவிலான அறுவைச் சிகிச்சை மகப்பேறுகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உலக சுகாதார அமைப்பு கூறினாலும், பெரும்பாலான நாடுகளில் இது அதிகமாகவே உள்ளது.
அமெரிக்காவில் 32 சதவிகிதம், இங்கிலாந்தில் 45 சதவிகிதம், பிரேஸிலில் 52 சதவிகிதம், லத்தீன் அமெரிக்காவில் 42 சதவிகிதமாகவும் உள்ளது.
இருப்பினும், ஸ்வீடன் (19%) மற்றும் நார்வே (16%) போன்ற நாடுகளில் தேவையற்ற அறுவைச் சிகிச்சைகளைக் குறைப்பதில் கவனம் கொள்வதால், அறுவைச் சிகிச்சை மகப்பேறு விகிதம் குறைவாகவே உள்ளது.