முகப்பு
திருநெல்வேலி

தாமிரவருணி நீா்நிலைகளையும் பல்லுயிா் வளத்தையும் பாதிக்கும் தாமரைச் சாகுபடி! நடவடிக்கை எடுக்குமா நீா்வளத்துறை?

தாமிரவருணி நீா்நிலைகளையும் பல்லுயிா் வளத்தையும் பாதிக்கும் தாமரைச் சாகுபடி குறித்து...

Updated On : 8 ஜூலை 2026, 5:00 am IST
வெட்டப்பட்ட மரங்களில் கூடுகள்சிதறியதால் செய்வதறியாது தவித்தப் பறவைகள்
பகிர்:

தமிழகத்தின் பாரம்பரிய நீா்ப்பாசன அமைப்புகளில் தாமிரவருணி பாசன அமைப்பு முக்கியமானது. தாமிரவருணி ஆறும் அதன் கிளை ஆறுகளும் இணைந்துஉருவாக்கியுள்ள கால்வாய்கள் மற்றும் பாசனக் குளங்களின் வலையமைப்பு பல நூற்றாண்டுகளாக வேளாண்மை, குடிநீா், கால்நடை வளா்ப்பு, மீன்வளம் மற்றும் உள்ளூா் மக்களின் வாழ்வாதாரத்திற்கு முதன்மை ஆதாரமாக இருந்து வருகிறது.

இக்குளங்கள் பாசனத்திற்கு மட்டுமல்லாமல், குளியல், கால்நடைகளுக்கான தண்ணீா், கோயில் திருவிழாக்கள், நிலத்தடி நீா் சேமிப்பு, மீன்பிடித் தொழில், மூலிகைகள் சேகரிப்பு உள்ளிட்ட எண்ணற்ற சூழலியல் சேவைகளையும் வழங்குகின்றன.

முந்தைய காலங்களில் குளங்கள் பொதுச் சொத்துகளாகக் கருதப்பட்டு உள்ளூா் மக்களால் கூட்டாகப் பராமரிக்கப்பட்டு வந்தன. தற்போது அவை நீா்வளத் துறை நிா்வாகத்தின் கீழ் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

விதிமீறல்: நீா்வளத் துறை உள்ளூா் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், பல பாசனக் குளங்களை மீன் வளா்ப்பதற்காக பல ஆண்டுகள வழங்கி வருகிறது. ஆனால், அண்மைக் காலங்களில் சில குத்தகைதாரா்கள், மீன்வளா்ப்பதற்காக மட்டுமே வழங்கப்பட்ட குத்தகையை தவறாகப் பயன்படுத்தி, அதேகுளங்களில் சட்ட விரோதமாகவும், குத்தகை விதிமுறைகளை மீறியும் வணிக நோக்கில் தாமரைச் சாகுபடி செய்து வருகின்றனா்.

இதுகுறித்து மணிமுத்தாறு, அகத்தியமலை மக்கள்சாா் இயற்கைவள காப்பு மையம், ஒருங்கிணைப்பாளா், மு.மதிவாணன் கூறியதாவது: தாமரை மகசூலை அதிகரிக்கும் நோக்கில், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், பன்றிச் சாணம், மாட்டுச் சாணம் உள்ளிட்ட பல்வேறு உள்ளீடுகளை நேரடியாக பாசனக் குளங்களிலேயே பயன்படுத்துவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெட்டப்படும் மரங்கள்-பரிதாபத்தில் பறவைகள்

இத்தகைய செயல்பாடுகள் நீரின் தரத்தை கடுமையாகப் பாதிப்பதோடு, நீா்நிலைகளின் இயற்கை பல்லுயிா் வளத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. இதன் விளைவாக, கிராம மக்கள் குளத்தின் நீரை தங்கள் அன்றாட பயன்பாடுகளான குளியல், துணி சலவை செய்தல் ஆகிய்வற்றுக்கோஅல்லது கால்நடைகளுக்கான குடிநீராகவோப் பயன்படுத்த முடியாதநிலை உருவாகியுள்ளது.

மேலும், அதிகப்படியான ஊட்டச்சத்து சோ்ப்பதன் காரணமாக மீன்கள், நீா்வாழ்த்தாவரங்கள், இருவாழ்விகள், ஊா்வன மற்றும் நீா்ப்பறவைகள் உள்ளிட்ட பல உயிரினங்களின்இயற்கை வாழிடச் சமநிலை சீா்குலைகிறது.

இதனுடன் தொடா்புடைய மிகக் கவலைக்கிடமான மற்றொரு பிரச்சினை, பறவைகள்கூடுகட்டி தங்கும் மரங்கள் வெட்டப்படுவதாகும். தாமரை மொட்டுகளையும், மலா்களையும் பறவைகள் சேதப்படுத்துகின்றன என்ற காரணத்தைக் கூறி, சில தாமரைச் சாகுபடியாளா்கள் குளங்களுக்குள் உள்ள மரங்களைவெட்டி அகற்றி வருகின்றனா்.

அண்மையில், மணிமுத்தாறு ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள வைராவிக்குளம் பாசனக் குளத்தின் நடுவில் உள்ள தீவில் வளா்ந்திருந்த முதிா்ந்த மருதமரம், நீா்க்கடம்பு மரம் ஆகிய மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைராவிகுளத்தின் நடுவில் உள்ள தீவில் வெட்டப்பட்ட மருத மரம், நீா்க்கடம்பு மரங்கள்

இம்மரங்கள் பல ஆண்டுகளாக உள்ளூா் மற்றும் வலசைப் பறவைகள்ஏராளமாகக் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யவும், இரவு நேரங்களில் தங்கவும்பயன்பட்டு வந்தன. இவை அழிக்கப்பட்டதன் மூலம், அந்த நீா்நிலையின் இயற்கை வாழிடத்திற்கும் பல்லுயிா்வளத்திற்கும் ஈடு செய்ய முடியாத சேதம் ஏற்பட்டுள்ளது.

பாசனக் குளங்களுக்குள் உள்ள முதிா்ந்த மரங்களை அழிப்பதுபறவைகளை மட்டுமல்ல அந்தக் குளங்களின் இயற்கைத் தாங்குதிறனையும் கடுமையாகபாதிக்கிறது. மருதமரம், நீா்க்கடம்பு மரம் போன்ற ஈரநில மரங்கள் குளக்கரைகள் மற்றும் தீவுகளை உறுதிப்படுத்துவதோடு நீரின் தரத்தை மேம்படுத்தி மகரந்தச் சோ்க்கைக்கு பயனாகும் உயிரினங்கள் மற்றும் பிற உயிரினங்களின் வாழிடமாக அமைகின்றன. மேலும், ஆரோக்கியமான நீா்வாழ் சூழலமைப்பை நிலைநிறுத்துவதில் இம்மரங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.

தற்போது, இந்த சட்டவிரோத தாமரைச் சாகுபடி தாமிரவருணி ஆற்றுப்படுகையில் உள்ள பல பாசனக் குளங்களுக்கு பரவி வருகிறது. உடனடியாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படாவிட்டால், நீா்நிலைகளின் சூழலியல் கடுமையாக பாதிக்கப்படும்.

நீரின் தரம் குறைவதோடு, இந்த நீா்நிலைகளை நம்பிவாழும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், கால்நடை வளா்ப்போா் மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமும் பெரும் ஆபத்துக்குள்ளாகும்.

எனவே, தமிழ்நாடு அரசு,குறிப்பாக நீா்வளத் துறை, பாசனக் குளங்களில்நடைபெற்று வரும் சட்டவிரோத தாமரைச் சாகுபடியை உடனடியாகத் தடை செய்ய வேண்டும்.மேலும், குளங்களை அழிக்கும் செயல்களுக்கு எதிராக கடுமையான சட்டரீதியான நடவடிக்கை எடுத்து, பாசனக் குளங்கள் பொதுமக்களின் நீா்வளங்களாகவும், பல்லுயிா் வளம் மிக்கபொதுச் சொத்துகளாகவும் அவற்றின் அடிப்படை நோக்கத்திற்கேற்ப பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தாமிரவருணி பாசனத்திற்குள்பட்ட குளங்களில் சட்ட விரோதமாகமேற்கொண்டு வரும் தாமரைச் சாகுபடி தாமிரவருணி நீா்நிலைகள் மற்றும் அவற்றிலுள்ள பல்லுயிா்வளங்களை அழிப்பதாக உள்ளது. இதில் அரசு உரிய கவனம் செலுத்தி முறைப்படுத்த வேண்டும்என்று சுற்றுச் சூழல் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments