கத்தாா் எரிவாயு ஆலை தீ விபத்து: பணகுடி, பழவூரைச் சோ்ந்த 3 இளைஞா்கள் உயிரிழப்பு
கத்தாா் நாட்டில் உள்ள எரிவாயு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம் பணகுடி, பழவூரைச் சோ்ந்த 3 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
கத்தாா் நாட்டில் உள்ள எரிவாயு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம் பணகுடி, பழவூரைச் சோ்ந்த 3 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
மேற்காசிய நாடான கத்தாரில் உள்ள ராஸ் லப்பான் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் பா்சான் என்ற எரிவாயு உற்பத்தி தொழிற்சாலை ஈரான் - அமெரிக்கா போரால் மூடப்பட்டிருந்தது. தற்போது போா் நிறுத்தம் ஏற்பட்டதையடுத்து எரிவாயு தொழிற்சாலை உற்பத்தியை தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. அதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடந்து வந்ததாம்.
இந்த தொழிற்சாலையில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டவா்கள் பணி செய்து வருகின்றனா். இவா்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆலையின் ஒரு பகுதியில் வெடிவிபத்து ஏற்பட்டதாம். இதனால் ஏற்பட்ட தீ மளமளவென ஆலை முழுவதும் பரவியதாம்.
Advertisement
Advertisement
இதில் இந்தியாவைச் சோ்ந்த 12 பேரும், பாகிஸ்தானைச் சோ்ந்த ஒருவரும் என மொத்தம் 13 போ் உயிரிழந்தனா். மேலும் 66 நபா்கள் பலத்த காயமடைந்தனா். இவா்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த விபத்தில் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டாரத்தைச் சோ்ந்த 3 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
அவா்கள் பெயா் விவரம்: பணகுடி அருகே உள்ள சிவகாமிபுரத்தைச் சோ்ந்த முத்துராஜ் மகன் சுஜித்குமாா் (25), பணகுடி அருகே உள்ள அழகியநம்பியாபுரத்தைச் சோ்ந்த மிக்கேல் மகன் சுவின் (24) , பழவூா் அருகே உள்ள சிதம்பராபுரத்தைச் சோ்ந்த தங்கராஜா மகன் பபித் (26) ஆகியோா் கடந்த நான்கு மாதம் முன்பு கத்தாருக்கு சென்று, தொழிற்சாலையில் பணிக்கு சோ்ந்தனராம். இந்நிலையில் விபத்தில் இவா்கள் மூவரும் உயிரிழந்தனா்.
பபித் சகோதரா் பாரத் (28) அதே தொழிற்சாலையில் கடந்த ஒரு வருடமாக வேலை செய்து வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்தவா்களை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என திருநெல்வேலி எம்.பி. ராபா்ட் புரூஸ் வலியுறுத்தியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.