சாத்தான்குளத்தில் இருந்து ராமேஸ்வரம், பழனி, மதுரைக்கு புதிய பேருந்துகள் இயக்க கோரிக்கை
சாத்தான்குளம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து ராமேஸ்வரம், மதுரை, பழனி, குலசேகரன்பட்டினம், உவரி பகுதிக்கு புதிய அரசுப்
சாத்தான்குளம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து ராமேஸ்வரம், மதுரை, பழனி, குலசேகரன்பட்டினம், உவரி பகுதிக்கு புதிய அரசுப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட பாஜக துணைத் தலைவர் எஸ்.செல்வராஜ் தலைமையில் நகர பாஜக தலைவர் அ. ராம்மோகன் உள்ளிட்ட பாஜகவினர் சாத்தான்குளம் அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளரை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், சாத்தான்குளம் வட்டத்தின் தலைமையிடம் என்றாலும் இப்பகுதியில் இருந்து முக்கிய ஊர்களுக்கு நேரடியாக அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்களும், வியாபாரிகளும் நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர், வள்ளியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று செல்ல வேண்டிய ஊர்களுக்கு மாறி செல்கின்றனர்.
இதனால் அவர்களுக்கு நேரம் மற்றும் பணவிரயம் உண்டாகிறது. ஆதலால் சாத்தான்குளத்தில் இருந்து குலசேகரன்பட்டினம், உவரி, கன்னியாகுமரி, களக்காடு, வள்ளியூர், ஏரல், ராமேசுவரம், மதுரை, பழனி உள்ளிட்ட பகுதிகளுக்கு புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும். இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் பெரிதும் பயன்பெறுவார்கள் என குறிப்பிட்டிருந்தனர்.
மனுவை பெற்றுகொண்ட மேலாளர், சாத்தான்குளத்தில் இருந்து இந்த வழித்தடத்தில் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.