முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி ஆட்சியரிடம்  வேலைவாய்ப்பு, பாதுகாப்பு கேட்டு கிராம மக்கள் மனு

தூத்துக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு கேட்டு கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Updated On : 24 ஜூலை 2018, 12:56 am IST
பகிர்:

தூத்துக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு கேட்டு கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது ஆட்சியர் சந்தீப் நந்தூரி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது, தூத்துக்குடி மீளவிட்டான் மற்றும் தெற்கு வீரபாண்டியபுரம் பகுதி மக்கள் அளித்த மனு விவரம்:
ஸ்டெர்லைட் ஆலை பல ஆண்டுகளாக இயங்கி வந்த நிலையில், அந்த ஆலை மூலம் எங்கள் ஊரிலும் சுற்றுப்புற கிராமங்களிலும் அதிகப்படியான மக்கள் நேரடியாகவும், ஒப்பந்ததாரர்கள் மூலமாகவும் வேலைவாய்ப்பு பெற்று நல்ல வருமானம் ஈட்டிவந்தனர். இலவச மருத்துவ முகாம், குழந்தைகள் படிப்புக்கான ஊக்கத்தொகை, ஊர் திருவிழா, கலை நிகழ்ச்சிகள் என பல உதவிகள் செய்யப்பட்டு வந்தது.
தற்போது ஆலை மூடப்பட்டுள்ளதால், குழந்தைகளின் படிப்பு உள்ளிட்ட அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் எங்கள் கிராமத்தைவிட்டு வெளியேற முடியாமலும், வருமானத்துக்கு வழி இல்லாமலும் தவித்து வருகிறோம். எனவே, கிராம மக்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும். காயல்பட்டினம் அருகேயுள்ள கொம்புத்துறையை சேர்ந்த ஜோயி உள்ளிட்டோர் அளித்த மனு:
எங்கள் பகுதியைச் சேர்ந்த 5 குடும்பத்தினர் குழந்தைகளை ஆறுமுகனேரில் உள்ள ஆங்கிலவழி கல்வியில் படிக்க வைத்து வருகிறோம். இதனால், ஊர் சட்டத்தை மீறி வெளியூரில் குழந்தைகளை படிக்கவைக்கக் கூடாது என்று ஊர் கமிட்டியினர் மிரட்டினர். 
இந்தப் பிரச்னையால் நாங்கள் எங்கள் பகுதியில் உள்ள புனித முடியப்பர் கோயிலுக்குக் கூட சென்று வழிபட முடியவில்லை. வாழ்வதற்கான சமநீதி உரிமை, பேச்சுரிமை, சுதந்திரமாக மதவழிபாடு செய்யும் உரிமை என அனைத்தும் ஊரில் எங்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. எனவே, எங்கள் குடும்பங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். கடல் தொழில் செய்து வந்த எங்களுக்கு ஊர் கமிட்டியினர் விதித்த தடையை நீக்கி, நாங்கள் தொழில் செய்ய உதவவேண்டும்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், வடக்கு தோழப்பன்பண்ணையைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனு:
எங்கள் பகுதியில் சுமார் 400 குடும்பங்கள் உள்ளன. நாங்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை செய்து வந்தோம். அதன்பிறகு எங்கள் ஊருக்கு வேலைவாய்ப்பு வரவில்லை என்று அதிகாரிகள் கூறி எங்களை தட்டிக்கழிக்கின்றனர். எனவே, எங்கள் ஊர் மக்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருச்செந்தூர் அருகேயுள்ள மெஞ்ஞானபுரம் பகுதி மக்கள் அளித்த மனு: எங்கள் வட்டாரத்தில் 2 ஆண்டுகளாக மழை பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. அரசு அமைத்துள்ள ஆழ்துளை கிணறுகளும் வற்றி, பொதுமக்களுக்கு போதுமான குடிநீர், மற்றும் அன்றாட தேவைகளுக்கான நீரும் கிடைக்கவில்லை. கடந்த 1991-96 காலகட்டத்தில் மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் வகையில், சடையநேரி கால்வாயில் இருந்து 15 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதேபோல, தற்போது சடையநேரி கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும். தூத்துக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் அளித்த மனு:
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் விவசாயிகள் தாங்கள் சார்ந்த தொழில்நுட்பம், வேளாண் உற்பத்தி, தோட்டக்கலை நுட்பங்கள் போன்ற விவசாய செயல்பாடுகளை பயன்படுத்திக்கொள்ள ஆண்டுதோறும் தூத்துக்குடியில் விவசாய கண்காட்சி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments