மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடி வருகை: ஊராட்சி சபைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் ஊராட்சி சபை கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் ஊராட்சி சபை கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் திங்கள்கிழமை காலை 8 மணியளவில் தூத்துக்குடி வருகிறார். அவருக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையிலும், வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையிலும் விமான நிலையத்தில் வைத்து வரவேற்பு அளிக்கப்படுகிறது.
தொடர்ந்து, சவலாப்பேரி கிராமத்துக்குச் செல்லும் ஸ்டாலின், உயிரிழந்த ராணுவ வீரர் சுப்பிரமணியன் குடும்பத்துக்கு ஆறுதல் கூறுகிறார். பின்னர், காலை 10 மணியளவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில், ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட செக்காரக்குடி கிராமத்தில் நடைபெறும் ஊராட்சி சபை கூட்டத்திலும், கூட்டுடன்காடு கிராமத்தில் நடைபெறும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசுகிறார்.
இதைத்தொடர்ந்து, மாலை 4 மணியளவில் விளாத்திகுளம் ஒன்றியம், வேம்பார் தெற்கு ஊராட்சியில் நடைபெறும் ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் ஸ்டாலின், பின்னர், விளாத்திகுளம் பேரவைத் தொகுதிக்கான வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை வழங்குகிறார். பின்னர், அங்கிருந்து கார் மூலம் மதுரை விமான நிலையம் சென்றடைகிறார்.