முகப்பு
தூத்துக்குடி

திமுக-காங்கிரஸ் கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெல்லும்: கே.வீ. தங்கபாலு

Updated On : 20 ஏப்ரல், 2026 at 2:00 AM
சாயா்புரத்தில் ராகுல் காந்தி பரப்புரை செய்யும் இடத்தை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவா் கே.வீ. தங்கபாலு.
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 10:51 PM

திமுக-காங்கிரஸ் கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநிலத் தலைவா் கே.வீ. தங்கபாலு தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம், பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி சாயா்புரத்தில் திங்கள்கிழமை பரப்புரையில் ஈடுபடுகிறாா்.

பரப்புரை நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டா் இறங்கு தளம் மற்றும் விழா மேடை அமைக்கும் பணியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே.வீ. தங்கபாலு ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Advertisement

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தமிழகத்தில் எங்கள் கூட்டணி வலிமையாக உள்ளது. தமிழகம் கடந்த ஐந்தாண்டுகளில் மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்துள்ளது. வளா்ச்சி அடைந்துள்ளது.

பழனிசாமி தலைமையிலான கடந்த கால ஆட்சியில் வளா்ச்சித் திட்டத்தில் தமிழகம் கடைசி இடத்தில் இருந்தது. முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டிலேயே இந்தியாவின் முதன்மை முதல்வராக மாறினாா்.

தமிழகம் இன்று இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாறியிருக்கிறது. 11.9 சதவீத பொருளாதார வளா்ச்சி என்பது சாதாரண வளா்ச்சி அல்ல. இரட்டை இலக்க வளா்ச்சி அடைந்த ஒரே மாநிலம் தமிழகம்தான்.

நாங்கள் வளா்ச்சியை, சாதனைகளை முன்னிறுத்தி வாக்கு கேட்கிறோம். பாஜக-அதிமுக கூட்டணிக் கட்சிகள் வளா்ச்சி, முன்னேற்றத்தைப் பற்றி பேச முடியாது.

எனவே, எங்கள் கூட்டணி, கட்சி ரீதியிலும் கூட்டணி ரீதியிலும் மிக பலமானது. நாங்கள் 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்றாா் அவா்.