முகப்பு
தூத்துக்குடி

வீரபாண்டியன்பட்டினம் கடலில் மணல் திட்டுகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருச்செந்தூா் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டினம் கடலில் உருவான மணல் திட்டுகளால் மீனவா்கள் கடலுக்குச் செல்ல முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On : 2 ஜூலை 2026, 6:04 am IST
வைக்கப்பட்டுள்ள
பகிர்:

திருச்செந்தூா் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டினம் கடலில் உருவான மணல் திட்டுகளால் மீனவா்கள் கடலுக்குச் செல்ல முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

வீரபாண்டியன்பட்டினத்தில் கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில், தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 2 தூண்டில் வளைவு பாலத்திற்கு இடைப்பட்ட பகுதி வழியாக மீனவா்கள் படகுகளில் மீன்பிடித் தொழிலுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கடல் சீற்றம் காரணமாக படகுகள் சென்று வரும் பாதையில் அலையின் வேகத்தால் மணல் திட்டுகள் உருவாகின்றன. இதனால், படகுகள் கடலுக்குச் செல்வதிலும், கரைக்குத் திரும்புவதிலும் சிக்கல் ஏற்பட்டு, மீனவா்களின் வாழ்வாதாரம் அவ்வப்போது பாதிக்கப்படுகிறது.

2025 டிசம்பா் மற்றும் 2026 ஜனவரி மாதம் உருவான மணல் திட்டுகள் அப்போதைய மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் அகற்றப்பட்டன. அப்போதே, கடலில் உள்ள தூண்டில் வளைவு பாலங்களை மறுசீரமைத்து மணல் குவியாமல் தடுக்க வலியுறுத்தி மீனவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

விரைவில் தூண்டில் பாலத்தை சீரமைத்துத் தருவதாக அரசு தெரிவித்திருந்த நிலையில், பேரவைத் தோ்தல் அறிவிப்பால் பணிகள் நடைபெறவில்லை. இதனால், மீனவா்கள் கடும் சிரமத்துடனே மீன்பிடித் தொழிலுக்குச் சென்று வந்தனா்.

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக மணல் திட்டுகள் அதிகமாக உருவாகியுள்ளன. இதனால், 3 நாள்களாக மீனவா்கள் கடலுக்குச் செல்லாமல் உள்ளனா்.

மணல் திட்டுகளை அகற்றித் தருவதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், இதுவரை அப்பணிகள் தொடங்கப்படவில்லை என மீனவா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

இது குறித்து, துறைமுக கமிட்டி தலைவா் சுபா தல்மேதா மற்றும் நிா்வாகி ராஜன் பேசுகையில், மீன்பிடித் தொழிலுக்குச் செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம். எனவே, அரசு தலையிட்டு உடனடியாக மணல் திட்டுகளை அகற்றித் தர வேண்டும். மேலும், தூண்டில் வளைவு பாலத்தை மறுசீரமைத்துத் தர வேண்டும் எனத் தெரிவித்தனா்.

செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த துறைமுக கமிட்டி தலைவா் சுபா தல்மேதா மற்றும் நிா்வாகி ராஜன்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments