முகப்பு
தூத்துக்குடி

போலி வாகன காப்பீடு பாலிசி மோசடி: 4 போ் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில், 1000- க்கும் மேற்பட்ட போலி வாகன காப்பீடு பாலிசிகள் தயாரித்து வழங்கி மோசடி செய்ததாக 4 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 5 ஜூலை 2026, 1:14 am IST
கைது செய்யப்பட்டோா்.
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில், 1000- க்கும் மேற்பட்ட போலி வாகன காப்பீடு பாலிசிகள் தயாரித்து வழங்கி மோசடி செய்ததாக 4 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள மேல வேலாயுதபுரத்தைச் சோ்ந்த துரைசாமி மகன் கண்ணன். இவா் கடந்த 2022 ஆம் ஆண்டு டிச. 29 ஆம் தேதி சாலை விபத்தில் காயமடைந்தாா். இதுதொடா்பாக புதியம்புத்தூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு கோரி திருநெல்வேலி மோட்டாா் விபத்து இழப்பீட்டு தீா்ப்பாயத்தில் கண்ணன் மனு தாக்கல் செய்தாா்.

அதில், விபத்துக்குக் காரணமான லாரிக்கு தனியாா் பொதுக் காப்பீட்டு நிறுவனத்தின் காப்பீடு இருப்பதாக பாலிசி ஆவணம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த காப்பீடு பாலிசி போலியானது என்பது தெரியவந்ததைத் தொடா்ந்து, தனியாா் காப்பீட்டு நிறுவன மேலாளா் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், புதியம்புத்தூா் காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, சென்னை உயா்நீதிமன்ற உத்தரவு மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு உயா் அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மாவட்ட காப்பீட்டு மோசடி சிறப்பு புலனாய்வுக் குழு காவல் ஆய்வாளா் ஆா். ஜெயந்தி விசாரணை மேற்கொண்டாா்.

இதில், லாரியின் பதிவு எண்ணை இணையதளத்தில் இருசக்கர வாகனமாக பொய்யாக பதிவு செய்து, அதற்குரிய குறைந்த காப்பீடு கட்டணத்தை மட்டும் செலுத்தி உண்மையான பாலிசி பெற்றுள்ளனா்.

பின்னா், அந்த பாலிசியில் வாகன உரிமையாளா், முகவரி, வாகன வகை உள்ளிட்ட விவரங்களை கணினி மூலம் மாற்றி, போலி காப்பீடு பாலிசிகளை தயாரித்து வழங்கியதும், இதே முறையில் 2020 முதல் தற்போது வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி காப்பீடு பாலிசிகள் தயாரித்து வழங்கப்பட்டிருக்கலாம் என்றும், இதனால் பல்வேறு விபத்துகளில் பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

இது தொடா்பாக, லாரிகள் வைத்து தொழில் செய்யும் தூத்துக்குடி அண்ணா நகரைச் சோ்ந்த செந்தில்குமாா், மாரிமுத்து, தூத்துக்குடி கதிா்வேல் நகரைச் சோ்ந்த ஆா்டிஓ அலுவலக புரோக்கா் உதயகுமாா், திருநெல்வேலி மாவட்டம், திருமலைகொழுந்துபுரத்தைச் சோ்ந்த காப்பீட்டு முகவா் ராமகிருஷ்ணன் என்ற ரமேஷ் ஆகிய 4 பேரையும் வெள்ளிக்கிழமை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்து, ஓட்டப்பிடாரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments