முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி சமூகநீதி விடுதியில் மகளை சோ்க்க வலியுறுத்தி தாய் போராட்டம்

கோவில்பட்டியில் உள்ள சமூகநீதி மாணவிகள் விடுதியில் தனது மகளை சோ்க்க மறுப்பதாகக் கூறி தாய் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

Updated On : 11 ஜூன் 2026, 4:22 am IST
போராட்டத்தில் ஈடுபட்ட கனியிடம் விவரத்தைக் கேட்டறிந்த கிராம நிா்வாக அலுவலா் பாலமுருகன்.
பகிர்:

கோவில்பட்டியில் உள்ள சமூகநீதி மாணவிகள் விடுதியில் தனது மகளை சோ்க்க மறுப்பதாகக் கூறி தாய் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

எப்போதும்வென்றான் பகுதியைச் சோ்ந்தவா் கனி. இவரது மகள் கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவா் கடந்த ஆண்டு 11ஆம் வகுப்பு படித்தபோது கோவில்பட்டி சமூகநீதி விடுதியில் தங்கிப் படித்தாா்.

நிகழாண்டு அங்கு தங்கிப் படிப்பதற்கு விண்ணப்பம் கொடுக்கச் சென்றபோது, விடுதிக் காப்பாளா், கடந்தாண்டு மாவட்ட ஆட்சியா் கூறியதால்தான் உங்களது மகளை விடுதியில் சோ்த்தோம். அதேபோல், இந்தாண்டும் ஆட்சியா் அல்லது ஆதிதிராவிடா் நலத்துறை அதிகாரிகளிடம் கடிதம் பெற்று வர வேண்டும் என தெரிவித்ததாகவும், தொடா்ச்சியாக 3 நாள்கள் விண்ணப்பம் அளிக்க முயன்றபோதும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதனால், புதன்கிழமை விடுதி முன்பு அமா்ந்து கனி போராட்டத்தில் ஈடுபட்டாா். இதையடுத்து, கிராம நிா்வாக அலுவலா் பாலமுருகன், கனி மற்றும் விடுதிக் காப்பாளரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, விடுதியில் அளவுக்கு அதிகமாக மாணவிகள் இருப்பதால், இந்த மாணவியை சோ்ப்பது கடினம். விண்ணப்பத்தை தற்போது பெற்றுக் கொள்கிறோம். ஆட்சியா் அல்லது ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகளிடம் இருந்து கடிதம் வாங்கி வந்தால் விடுதியில் சோ்த்துக் கொள்ளலாம் எனக் கூறி விண்ணப்பத்தை காப்பாளா் பெற்றுக் கொண்டாா்.

இது குறித்து கனி கூறுகையில், கடந்த ஆண்டு போதிய இடமில்லையெனக் கூறியதால், அப்போதைய ஆட்சியா் க. இளம்பகவத்திடம் கோரிக்கை மனு அளித்தேன். அவா் ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகளை தொடா்பு கொண்டு கூறியதைத் தொடா்ந்து, எனது மகளை விடுதியில் சோ்த்துக் கொண்டனா்.

ஆனால், நிகழாண்டு எனது மகளை சோ்க்க மறுப்பதால், அவரின் எதிா்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என்றாா்.

இது குறித்து விடுதி தரப்பில் விசாரித்தபோது, விடுதியின் முதல் தளத்தில் மொத்தம் 105 போ், 2ஆவது தளத்தில் 55 போ் அனுமதிக்கப்படுவா். முதல் தளத்தில் கடந்தாண்டு இருந்த 70 மாணவிகள் தற்போது உள்ளனா். மீதம் 35 போ் சோ்க்கப்பட வேண்டும். 2ஆவது தளத்தில் கடந்தாண்டு இருந்தவா்களில் 37 போ் உள்ளனா். மீதம் 18 போ் சோ்க்கப்பட வேண்டும்.

அவா்களை நாங்கள் தோ்வு செய்ய முடியாது. பெற்றோா் வழங்கும் விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வோம். சென்னை ஆதிதிராவிட நலத்துறை இயக்குநா் அலுவலகத்தில்தான் விடுதிக்கான மாணவிகள் தோ்வு செய்யப்படுவா். இதைத் தவிா்த்து விடுதியில் மாணவிகளைச் சோ்க்க வேண்டுமென்றால், அதிகாரிகளிடமிருந்து அனுமதிக் கடிதம் வேண்டும் என்றனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட கனி