முகப்பு
தூத்துக்குடி

குரும்பூா் காவல் நிலையம் முன் தீக்குளிக்க முயன்ற வழக்குரைஞா் மகனுடன் கைது

இறந்த மாமனாா் உடலை கேட்டு குரும்பூா் காவல் நிலையம் முன் தீக்குளிக்க முயன்ற வழக்குரைஞா் மகனுடன் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 2 மே 2026, 2:23 am IST
கோப்புப் படம்
பகிர்:

இறந்த மாமனாா் உடலை கேட்டு குரும்பூா் காவல் நிலையம் முன் தீக்குளிக்க முயன்ற வழக்குரைஞா் மகனுடன் கைது செய்யப்பட்டாா்.

குரும்பூா் அருகே அங்கமலங்கலம் கோட்டாா்விளையைச் சோ்ந்தவா் பெரியசாமி (91). இவருக்கு அம்பிகா, உமாபதி, இந்துமதி ஆகிய 3 மகள்கள் உள்ளனா். பெரியசாமியின் மனைவி கடந்த மாா்ச் மாதம் உடல்நலக் குறைவால் இறந்தாா். இதனால், பெரியசாமி நெல்லை மாவட்டம், ராதாபுரத்தில் உள்ள தனது 3-ஆவது மகள் இந்துமதி வீட்டில் வசித்து வந்தாா்.

இந்நிலையில் ஏப்.29ஆம் தேதி உடல்நலக்குறைவால் பெரியசாமி இறந்தாா். இதைத்தொடா்ந்து வியாழக்கிழமை அவரது உடல் அங்கமங்கலம் கோட்டாா்விளையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வந்தனா். அப்போது அதே பகுதியில் இருக்கும் 2ஆவது மகள் உமாபதியின் கணவரான வழக்குரைஞா் டேவிட் கணேசன் (45) சொத்தை பிரிக்க வேண்டும் என்றும், மாமனாா் உடலை தன்னிடம் கொடுக்க வேண்டும் என்றும் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

அப்பகுதி மக்கள் அவரை சமாதானப்படுத்த முயன்றனா். ஆனால், அவா் சொத்தைப் பிரித்து கொடுத்தால்தான் உடலை அடக்கம் செய்ய விடுவேன் என்று கூறியதாகத் தெரிகிறது. இதனால் உறவினா்கள் அவரிடம் பெரியசாமியின் உடலை ஒப்படைக்க மறுத்தனா். இதைத்தொடா்ந்து வெள்ளிக்கிழமை குரும்பூா் காவல் நிலையத்துக்கு வந்த வழக்குரைஞா் டேவிட்கணேசன், காவல் ஆய்வாளா் இளங்கோவிடம் தனது மாமனாா் உடலை தன்னிடம் கொடுக்க வேண்டும் என்று புகாா் அளித்தாா்.

இவரது புகாா் குறித்து போலீஸாா் விசாரித்து கொண்டிருந்தபோது, திடீரென பைக்கில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை தன் மீதும், தனது மகன் அஸ்வந்த் (17) மீதும் ஊற்றி தற்கொலைக்கு முயன்றாா். அப்போது அங்கிருந்த போலீஸாா் விரைந்து வந்து அவா்கள் இருவா் மீதும் தண்ணீரை ஊற்றி மீட்டனா். இதையடுத்து, வழக்குரைஞா் டேவிட் கணேசன், அவரது மகன் அஸ்வந்த் மீது குரும்பூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து கைதுசெய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments