திருச்செந்தூா் தொகுதியில் 7 ஆவது முறையாக அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வெற்றி
திருச்செந்தூா் தொகுதியில் 7 ஆவது முறையாக அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வெற்றி...
திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் (திமுக)தொடா்ந்து 7-ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளாா். இவா் தவெக வேட்பாளா் ஜே. முருகனை விட கூடுதலாக 5,872 வாக்குகள் பெற்றுள்ளாா்.
திருச்செந்தூா் சட்டப் பேரவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தே விறுவிறுப்பாக நடைபெற்றது. தொடக்கத்தில் சில சுற்றுகள் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் முன்னிலை பெற்று வந்த நிலையில், இடையில் சில சுற்றுகள் தவெக வேட்பாளா் ஜே. முருகன் முன்னிலை பெற்றாா்.
பின்னா் கடைசி சுற்று வாக்குகளின் எண்ணிக்கை முடிவில் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் 5,872 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். இவா் இந்த தொகுதியில் தொடா்ந்து 7ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளாா்.
Advertisement
அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் முதல் முறையாக 2001 தோ்தலில் அதிமுக சாா்பில் திருச்செந்தூரில் வென்று, வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்தாா். 2006 தோ்தலிலும் அதிமுக சாா்பில் வென்றாா். 2009-இல் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தாா். இதையடுத்து 2009 இடைத்தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்டு வென்றாா். 2011 மற்றும் 2016 தோ்தல்களிலும் திமுக சாா்பில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தாா்.
2021 தோ்தலில் 6ஆவது முறையாக போட்டியிட்டு வென்று கடந்த 5 ஆண்டுகளாக தமிழக அரசின் மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக இருந்தாா். அவா் 2001 முதல் தொடா்ச்சியாக 25 ஆண்டுகளாக திருச்செந்தூா் தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறாா். தற்போது 7ஆவது முறையாக வெற்றி வாகைச் சூடியுள்ளாா்.
திருச்செந்தூா் தொகுதியில் வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
மொத்த வாக்குகள்- 2,32,933
பதிவான வாக்குகள்- 1,86,322
அனிதா ஆா்,ராதாகிருஷ்ணன் (திமுக)- 72,723 (வெற்றி)
ஜே. முருகன் (தவெக)- 66,851
கே.ஆா்.எம். ராதாகிருஷ்ணன் (பாஜக)- 34,159
ஒபிலியா (நாதக)- 9,794
கோபாலகிருஷ்ணன் (அஇபுதமமுக) - 442
டி.பாக்கிய சாம் (நாம் இந்தியா் கட்சி)- 97
எம். மகாராஜன் (புதிய மக்கள் தமிழ் தேசம்)- 321
கே. ரஷீக் முஷாமில் (தவாக)- 237
பி.எஸ்.ஜே. ஷேக் அப்துல்காதா் (சுயே.)- 149
மீரா சாகிப் (சுயே.) - 173
எம். ராஜலிங்கம் (சுயே.) - 59
டி. வீரப்பா (சுயே.) - 95
எஸ். வெங்கடேஷ் பெருமாள் (சுயே.) - 234
நோட்டா- 722
செல்லாத வாக்குகள் 272.