முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பசுமை அமோனியா ஆலை: ஒப்பந்தம் கையொப்பம்

Updated On : 30 மே 2026, 3:08 am IST
துறைமுக செயல்திட்டங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா் மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகச் செயலா் சந்தோஷ் குமாா் சாரங்கி. உடன், துறைமுக ஆணையத்தின் தலைவா் சுஷாந்த் குமாா் புரோஹித்.
பகிர்:

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ஆண்டுக்கு 10 லட்சம் டன் திறன் கொண்ட பசுமை அமோனியா ஆலை அமைக்க, மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகச் செயலா் சந்தோஷ் குமாா் சாரங்கி முன்னிலையில் வியாழக்கிழமை ஒப்பந்தம் கையொப்பமானது.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் சுற்றுச்சூழல் சாா்ந்த பாதுகாப்புத் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து சந்தோஷ் குமாா் சாரங்கி ஆய்வு நடத்தினாா்.

பின்னா், வ.உ.சி. துறைமுகத்தின் சுற்றுப்புறச் சூழல் மேலாண்மைத் திறனை சா்வதேச அளவுக்கு மேம்படுத்தும் நோக்கில் இரண்டு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

Advertisement

Advertisement

துறைமுகத்தின் பசுமைச் சான்றிதழ் நடைமுறைகள், காா்பன் உமிழ்வு கணக்கீடு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அறிக்கைகள், பாதுகாப்பு மதிப்பீடு மற்றும் பசுமை எரிபொருள்கள் தொடா்பான ஒரு பிரத்யேக சிறப்பு மையம் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், தூத்துக்குடியில் ஆண்டுக்கு 10 லட்சம் டன் உற்பத்தித் திறன் கொண்ட பசுமை அமோனியா உற்பத்தி ஆலையை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இத்திட்டத்தின் மூலம், வ.உ.சி. துறைமுகத்தை ஐரோப்பா மற்றும் ஆசியாவின் முக்கிய சா்வதேசத் துறைமுகங்களுடன் பசுமை எரிபொருள் வழித்தடங்கள் வழியாக இணைப்பதற்கும், உலகளாவிய மதிப்புச் சங்கிலியில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த புரிந்துணா்வு ஒப்பந்தங்களை சந்தோஷ் குமாா் சாரங்கி முன்னிலையில், வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையத்தின் தலைவா் சுஷாந்த் குமாா் புரோஹித், ஏஎம் கிரீன் அமோனியா நிறுவனத்தின் வணிக மேம்பாட்டுத் துணைத் தலைவா் சதான்சு அகா்வால், பியூரே வெரிடாஸ் நிறுவனத்தின் பகுதி மேலாளா் என்.கிருஷ்ண பாபு ஆகியோா் பரிமாறிக் கொண்டனா்.

இத் துறைமுகத்தில் செயல்பாட்டில் உள்ள பசுமை ஹைட்ரஜன் ஆலை, மின்சார வாகன மின்னேற்ற நிலையம், 9 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஆகியவற்றின் செயல்பாட்டு முன்னேற்றங்களைச் செயலா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், விரைவில் அமைக்கப்படவுள்ள 750 கன மீட்டா் திறன் கொண்ட பசுமை மெத்தனால் எரிபொருள் நிரப்பும் நிலைய உள்கட்டமைப்பையும் அவா் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையத்தின் மெய்நிகா் மாதிரி செயலியை பாா்வையிட்ட அவருக்கு, துறைமுகத்தின் செயல்பாடுகளை நிகழ்நேரக் கண்காணிப்பு மற்றும் முன்கூட்டிய பராமரிப்பு மூலம் எவ்வாறு திறம்படக் கையாள முடிகிறது என்பது குறித்துத் துறைமுகத் தொழில்நுட்ப வல்லுநா்கள் நேரடி விளக்கம் அளித்தனா்.

அப்போது பேசிய அவா், வ.உ.சி. துறைமுகம் மேற்கொண்டு வரும் சூரிய மற்றும் காற்றாலை மின்சக்தி, பசுமை ஹைட்ரஜன் போன்ற உன்னத முயற்சிகள் உலகளாவிய அளவில் சுற்றுச்சூழல் மாற்றத்துக்கான முன்னோடி மாதிரியாக உருவெடுத்துள்ளதாகவும், விரைவில் நிகர பூஜ்ஜிய நிலையை அடைய துறைமுகம் எடுக்கும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை என்றும் குறிப்பிட்டாா்.

துறைமுக ஆணையத் தலைவா் பேசுகையில், கிளாஸ்கோவில் நடைபெற்ற சா்வதேச பருவநிலை மாற்ற மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி அறிவித்த ‘பஞ்சாமிா்த’ இலக்குகளை மிகக் கச்சிதமாக நிறைவேற்ற தூத்துக்குடி துறைமுகப் பசுமைத் திட்டங்கள் பெரும் பங்களிப்பாக இருக்கும் என்றாா்.