ஆ. ராசாவை கைது செய்ய வேண்டும்:பழ. கருப்பையா
திருச்சி, ஜன. 4: 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவை கைது செய்ய வேண்டும் என்றார் அதிமுக மாநில இலக்கிய அணித் தலைவர் பழ. கருப்பையா. திருச்சி மாநகர் ம
திருச்சி, ஜன. 4: 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவை கைது செய்ய வேண்டும் என்றார் அதிமுக மாநில இலக்கிய அணித் தலைவர் பழ. கருப்பையா.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், உறையூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கண்டன பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
"2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட காரணமாக இருந்த மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா பதவி விலக முக்கியமான காரணமாக இருந்தவர் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாதான்.
Advertisement
Advertisement
ஆ. ராசாவை பதவி விலகச் செய்யுங்கள் என திமுக தலைவர் கருணாநிதியிடம், காங்கிரஸ் கட்சி சார்பில் கூறியபோது, தங்களது 7 மத்திய அமைச்சர்களும் ராஜிநாமா செய்வார்கள் என்றார் கருணாநிதி.
இதனால், மத்திய அரசு கவிழ்ந்துவிடுமோ என பயந்த காங்கிரசுக்கு, நிபந்தனையற்ற ஆதரவு கொடுக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தார்.
அதன் பிறகே, ஆ. ராசாவை பலிக்கொடுத்து தமிழக அரசை காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயம் கருணாநிதிக்கு ஏற்பட்டது.
அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவை கைது செய்து அவரிடம் உள்ள பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும். அவரை கைது செய்ய வைக்கும் சூத்திரம் ஜெயலலிதாவிடம் மட்டுமே உள்ளது. விரைவில் ஆ. ராசா கைது செய்யப்படுவார்.
பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திமுக என்ற கட்சியே இல்லாமல் போய்விடும். திமுக எந்த நோக்கத்துக்காக தொடங்கப்பட்டதோ அந்தக் கொள்கையில் இருந்து விலகிச் சென்று குடும்பக் கட்சியாக மாறிவிட்டதால் அந்தக் கட்சியால் இனி வெற்றி பெற முடியாது.
18 லட்சம் பேருக்கு இலவச வீடு வழங்கும் திட்டத்துக்கான அடையாள அட்டையை வழங்கி இருப்பது சட்டப்பேரவைத் தேர்தலை கணக்கில் கொண்டுதான்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கச்சத்தீவை மீட்க வேண்டும். அதற்கான சக்தி அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவிடம் மட்டுமே உள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் விலைவாசி அதிகளவில் உயர்ந்துள்ளது.
தமிழகம் மிகவும் மோசமான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதிமுக ஆட்சி வந்தால் மட்டுமே இந்த பொருளாதார வீழ்ச்சி சரிசெய்யப்பட்டு விலைவாசி குறையும்' என்றார் அவர்.
கூட்டத்தில், மாநகர் மாவட்டச் செயலர் ஆர். மனோகரன், மக்களவை உறுப்பினர் ப. குமார், சட்டப்பேரவை உறுப்பினர் மு. பரஞ்சோதி, முன்னாள் அமைச்சர்கள் கே.கே. பாலசுப்பிரமணியன், கு.ப. கிருஷ்ணன், முன்னாள் மாவட்டச் செயலர்கள் டி. ரத்தினவேல், என். மரியம்பிச்சை, கே.சி. பரமசிவம், அ. முருகையன், மாநகர் மாவட்ட அவைத் தலைவர் வெல்லமண்டி என். நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.