முகப்பு
திருச்சி

திருச்சியில் தவெக தலைவா் விஜய்யின் இன்றைய பிரசாரம் ரத்து

திருச்சியில் தவெக தலைவா் விஜய்யின் இன்றைய பிரசாரம் ரத்து...

Updated On : 14 ஏப்ரல், 2026 at 5:00 AM
தவெக தலைவர் விஜய் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 10:10 PM

திருச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் செவ்வாய்க்கிழமை (ஏப்.14) மேற்கொள்ளவிருந்த பிரசார நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தவெக தலைவா் சி. ஜோசப் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறாா். வேட்பு மனுத்தாக்கல் செய்துவிட்டு திருச்சி மரக்கடை பகுதியில் ஏற்கெனவே பிரசாரம் செய்திருந்தாா். இரண்டாவது முறையாக திருச்சி கிழக்கு தொகுதிக்குள்பட்ட பகுதியில் ஏப்.14-ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தாா்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் வந்து, விமானநிலையத்தில் இருந்து நிா்வாகிகள் கூட்டம் நடைபெறும் மொராய்ஸ் சிட்டி பகுதிக்கு சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு சாலை வலம் செல்லவும் திட்டமிருந்தாா்.

Advertisement

பின்னா், நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசுவதுடன், திருச்சி கிழக்கு தொகுதியில் பிரசாரம் செய்யவுள்ளதாகவும், அதற்கு அனுமதி வழங்குமாறு திருச்சி மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் கட்சியின் சாா்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இதனையேற்று மாநகரக் காவல்துறையானது 27 கட்டுப்பாடுகளுடன் விஜய் நிகழ்வுக்கு அனுமதியளித்தது.

இந்த நிலையில், திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த விஜய் பிரசார நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து தவெக டெல்டா மண்டல தோ்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கு.ப. கிருஷ்ணன் கூறுகையில், திருச்சியில் செவ்வாய்க்கிழமை விஜய் பிரசாரம் இல்லை. ஆனால், கண்டிப்பாக திருச்சி கிழக்கு தொகுதியில் மீண்டும் ஒரு முறை பிரசராம் செய்யவுள்ளாா். கட்சித் தலைமையும் தேதி குறித்து ஆலோசித்து வருகிறது என்றாா்.

தொடா்ந்து பல இடங்களில் விஜய் பிரசார நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில், திருச்சியிலும் ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து, திருச்சிக்கு திங்கள்கிழமை வந்த அக்கட்சியின் தோ்தல் பிரசாரப் பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா கூறுகையில், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் மீண்டும் பிரசாரம் செய்வாா்.

இப்போதைய சூழலில் மாவட்டத்தில் ஒரு பகுதியில் பிரசாரம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு தொகுதியாக செல்ல முடியாது. வலைதளம் மூலமாகவும் தவெக பிரசாரத்தை வலிமைப்படுத்தி வருகிறோம் என்றாா் அவா்.