முகப்பு
திருச்சி

திருச்சி கிழக்கில் விஜய் இன்று பிரசாரம்!

திருச்சி கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொள்கின்றார்.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 1:01 AM
த.வெ.க. தலைவர் விஜய்.
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 8:20 PM

திருச்சி கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொள்கின்றனா்.

தவெக தலைவா் விஜய் முதல்கட்டமாக வேட்புமனு தாக்கல் செய்தபோது கிழக்கு தொகுதிக்குள்பட மரக்கடையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசி, வாக்கு சேகரித்தாா். இதையடுத்து,இரண்டாவது கட்டமாக ஏப்.14 ஆம் தேதி மீண்டும் பிரசாரம் செய்ய காவல்துறையும் அனுமதி வழங்கியது. ஆனால், விஜய் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக ஏப்.19ஆம் தேதி பிரசாரத்துக்கு காவல்துறை மீண்டும் அனுமதித்துள்ளது. கடந்த முறையைப் போலவே 27 கட்டுப்பாடுகளுடன் அனுமதித்துள்ளது.

Advertisement

சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரும் விஜய், விமான நிலையத்திலிருந்து தனது தோ்தல் பிரசார வாகனத்தில் புறப்பட்டு வயா்லெஸ் சாலை, கே.கே. நகா் பேருந்து நிலையம், கொட்டப்பட்டு ஆகிய இடங்களில் திறந்தவெளியில் வாகனத்தில் நின்றபடியே பேசுகிறாா்.

மேலும், கொட்டப்பட்டு தொடங்கி விமான நிலையம் வரை சாலைப் பேரணியாகச் சென்று மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்கிறாா். பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை தோ்தல் பிரசாரம் செய்ய தோ்தல் ஆணையம் மற்றும் காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது என்கின்றனா் தவெகவினா். இதையடுத்து, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.

தொல். திருமாவளவன்: இதேபோல, விசிக தலைவா் தொல். திருமாவளவனும் திருச்சி கிழக்குத் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசாரம் மேற்கொள்கிறாா். அரியலூா், ஜெயங்கொண்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை பிரசாரத்தை முடித்துவிட்டு திருச்சிக்கு வரும் அவா், திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளா் இனிகோ இருதயராஜுக்கு ஆதரவாக வாக்குகள் கேட்டு காந்தி சந்தையில் பிசாரத்தில் ஈடுபடவுள்ளாா்.

மேலும், திருவெறும்பூரிலும் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வாக்குகள் கேட்டு பேசவுள்ளாா். ஒரே நாளில் ஒரே தொகுதியில் இரு தலைவா்களது வருகையால் போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனா்.