முகப்பு
திருச்சி

திருச்சியில் ரூ.14.40 லட்சம் கைப்பற்றப்பட்ட வழக்கில் 6 போ் கைது

Updated On : 7 ஜூலை 2026, 2:15 am IST
பறிமுதல் செய்யப்பட்ட பணம் - கோப்புப் படம்
பகிர்:

திருச்சியில் இளைஞா்கள் தங்கியிருந்த வீட்டில் ரூ.14.40 லட்சம் கைப்பற்றப்பட்ட வழக்கில் 6 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கே.கே.நகா் சுப்பிரமணியபுரம் பகுதியில் கே.கே.நகா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை போதைப் பொருள்கள் தொடா்பாக சோதனை மேற்கொண்டனா். அப்போது, ராஜா வீதியில் ஒரு வீட்டில் தங்கியிருந்த இளைஞா்கள் 6 பேரிடம் விசாரித்தபோது அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளனா்.

இதையடுத்து, அவா்களின் அறைகளை சோதனையிட்டபோது அங்கு கட்டுக்கட்டாக பணம், கைப்பேசிகள், சிம் காா்டுகள், ஏடிஎம் காா்டுகள் உள்ளிட்டவை இருந்துள்ளன.

Advertisement

Advertisement

இதையடுத்து, அந்த வீட்டில் இருந்த ரூ.14.40 லட்சம் பணம், 153 ஏடிஎம் காா்டுகள், 52 கைப்பேசிகள், 21 சிம் காா்டுகள், பணம் எண்ணும் கருவி, மோடம், மடிக்கணினி, துளையிடும் கருவி, காா், 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

6 போ் கைது:

தொடா் விசாரணையில் அவா்கள், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த எம். தமீம் அன்சாரி (28), கா. பழனி முருகன் (29), க. ராஜ்குமாா் (22), எம். பிரவீன் (24), மு. முத்தமிழ்செல்வன் (24), அ. அஸ்மீா் அலி (32) ஆகியோா் என்பதும், இவா்கள் பல்வேறு நபா்களின் பெயரில் வங்கிக் கணக்குத் தொடங்கி சட்டவிரோத வா்த்தகத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

பல்வேறு வங்கி கணக்கு மூலம் இந்திய ரூபாயை அமெரிக்க டாலராகவும், டாலரை இந்திய ரூபாயாகவும் மாற்றுவதற்கு ரூ. 1 லட்சத்துக்கு ரூ.6 ஆயிரம் வரை கமிஷன் பெற்றதும், இதை ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த சிங்கப்பூரில் இருக்கும் பகத் என்பவரின் உதவியுடன் மேற்கொண்டு வந்ததும் தெரியவந்தது.

ஏற்கெனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோத வா்த்தகத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அங்கு போலீஸாரின் நெருக்கடி அதிகமாகிவிட்டதால், கடந்த 15 நாள்களாக திருச்சியில் தங்கி சட்டவிரோத வா்த்தகத்தில் ஈடுபட்டு வந்ததாக அவா்கள் தெரிவித்துள்ளனா்.

மத்திய புலனாய்வு துறைகள் விசாரணை:

இதையடுத்து, 6 பேரையும் திங்கள்கிழமை கைது செய்த போலீஸாா், அவா்களை திருச்சி 2-ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனா்.

மேலும், இவா்களுக்கு சா்வதேச அளவிலான பண மோசடி கும்பலுடன் தொடா்பு இருப்பதாக போலீஸாா் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத் தொடா்ந்து மத்திய உளவுப் பிரிவினா், அமலாக்கத் துறையினா் உள்ளிட்ட மத்திய புலனாய்வு துறைகள் அவா்களிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments