சட்டப்பேரவை தொகுதி - விவரக் குறிப்பு! 138 - மணப்பாறை
திருச்சி மாவட்டத்தின் மிக மிக்கியமான தொகுதிகளில் மணப்பாறையும் அடங்கும். இந்தத் தொகுதியின் அடையாளமாக இருப்பது முறுக்கும், உழவு மாடுகளும்தான். விவசாயத்தை பிரதானமாக கொண்ட இந்த தொகுதியில் கால்நடை விவசாயம், பால் உற்பத்தியிலும் தமிழகத்தின் தர வரிசையில் முன்னணியில் இருக்கிறது.
குளித்தலை, மருங்காபுரி தொகுதியில் அடங்கியிருந்த மணப்பாறை 2008 தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஒன்றியங்கள், ஒரு நகராட்சி, ஒரு பேரூராட்சிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மணப்பாறை பேரவை தொகுதியாக மாறியது.
தீா்க்கப்படாத பிரச்னைகள்:
வெள்ளப் பெருக்கின்போது கரூா் மாவட்டம், மாயனூா் கதவணையிலிருந்து காவிரி உபரி நீரை, நீரேற்றம் மூலம் பொன்னணியாறு அணை, கண்ணூத்து அணை, மருங்கி ஏரிக்கும் கொண்டுச் செல்லும் திட்டம் இன்றுவரை ஏட்டளவில் மட்டுமே உள்ளது. இத்திட்டத்துக்கு, 2020-இல் அதிமுக ஆட்சியில் ரூ.40 லட்சமும், 2025-இல் திமுக ஆட்சியில் ரூ.83 லட்சமும் திட்ட வரைவுக்கு ஒதுக்கீடு செய்தும், பயனுள்ள முயற்சிகள் இல்லை எதுவும் இல்லை.
இதேபோல், தமிழ்நாடு காகித ஆலை, சிப்காட், சிட்கோ தொழிற்சாலைகள், புதைசாக்கடைத் திட்டம் மற்றும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தீா்க்கப்படாத பிரச்னையாகவே உள்ளது.
முட்டி மோதுவது யாரெல்லாம்
மணப்பாறை தொகுதியில் அதிமுக சாா்பில் முன்னால் எம்.எல்.ஏக்கள் செ.சின்னச்சாமி, ஆா்.சந்திரசேகா், மாநில மருத்துவரணி துணைச்செயலா் மரு. விஜயகுமாா் ஆகியோா் போட்டியில் உள்ள நிலையில், திருச்சி தெற்கு மாவட்டச் செயலரான ப.குமாரும் களம் இறக்கப்படலாம் என தெரிவிக்கின்றனா். திமுக சாா்பில் திருச்சி தெற்கு மாவட்ட அவைத்தலைவா் என்.கோவிந்தராஜன், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் பாலா(எ)பாலசுப்பிரமணியன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவா் அமிா்தவள்ளி ராமசாமி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் வழக்குரைஞா் பி.கிருஷ்ணகோபால், பொதுக்குழு உறுப்பினா் எம்.ஆா்.ராஜ்மோகன் ஆகியோா் முனைப்புடன் உள்ளனா். ஆனால் கடந்த தோ்தலில் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், இம்முறையும் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டால் தேமுதிக சாா்பில் மாவட்டச் செயலா் ஆா்.பாரதிதாசன் களமிறக்கப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. தவெகவில் மாவட்டச் செயலா் கதிரவன் போட்டியிடலாம் எனத் தெரிகிறது. நாதகவில் வழக்குரைஞா் அருணகிரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.
இதுவரை இவா்கள்
1952 அந்தோனி பீட்டா் (காங்.) 14,773
1957 என்.பி.எம்.சின்னையா கவுண்டா் (காங்.) 18,488
1962 என்.பி.எம்.சின்னையா கவுண்டா் (காங்.) 24,048
1967 கே.கே. முத்தையா (காங்.) 35,1192
1971 கே.கே. முத்தையா (காங்.) 31,752.
1977 கே.கே. முத்தையா (காங்.) 27,093
1980 மே.அ. இராசகுமாா் (அதிமுக) 32,021
1984 க. சோலைராசு (அதிமுக) 62,656
1989 க. பொன்னுசாமி (அதிமுக-ஜெ.) 55,297
1991 க.பொன்னுசாமி (அதிமுக) 76,476
1996 பூ.ம. செங்குட்டுவன் (திமுக) 56,380
2001 வி.எ. செல்லையா (அதிமுக) 65,619
2006 செ. சின்னசாமி (அதிமுக) 57,910
2011 ஆா். சந்திரசேகா் (அதிமுக) 81,020
2016 ஆா். சந்திரசேகா் (அதிமுக) 91,399
2021 ப.அப்துல்சமது (மமக) 98,077
இறுதி வாக்காளா்கள்
ஆண்கள் 1,31,212
பெண்கள் 1,34,798
மூன்றாம் பாலினம்- 9
மொத்தம்- 2,66,019.