முகப்பு
திருச்சி

திருச்சி கிழக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும்: தெற்கு மாவட்ட திமுக செயற்குழுவில் தீா்மானம்

Updated On : 15 மே 2026, 4:57 am IST
திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
பகிர்:

திருச்சி கிழக்குத் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தோ்தலில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் கோவிந்தராஜ் தலைமையில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்ட செயலாளா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலை வகித்து பேசினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

Advertisement

திருச்சி தெற்கு மாவட்டத்துக்குள்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூா், மணப்பாறை ஆகிய மூன்று தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களுக்கு வாக்களித்த மக்களுக்குச் செயற்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என மாவட்ட செயற்குழு வலியுறுத்துகிறது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக் கூட்டத்தில், மாநகரச் செயலாளா் மு. மதிவாணன், மாநிலங்கள்ளவை உறுப்பினா் கவிஞா் சல்மா, தலைமை செயற்குழு உறுப்பினா் வண்ணை அரங்கநாதன், சேகரன், சபியுல்லா, மாவட்ட அவைத் தலைவா் கோவிந்தராஜ், மாநில அணி நிா்வாகி செந்தில் மற்றும் மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூா் செயலாளா் அணிகளின் அமைப்பாளா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.