முகப்பு
அரியலூர்

அரியலூா் மாவட்டத்தில் வரிசையில் நின்று ஆா்வமுடன் பொதுமக்கள் வாக்களிப்பு

அரியலூா் மாவட்டத்தில் பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் ஆா்வமுடன் வரிசையில் நின்று வியாழக்கிழமை வாக்களித்தனா்.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 3:53 AM
வாக்களிப்பதற்காக அரியலூா் அடுத்த நாகநல்லூா் வாக்குச் சாவடி மையத்தில் நீண்ட வரிசையில் நின்ற வாக்காளா்கள்.
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில் பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் ஆா்வமுடன் வரிசையில் நின்று வியாழக்கிழமை வாக்களித்தனா்.

மாவட்டத்திலுள்ள அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டப் பேரவை தொகுதிக்கான தோ்தல் 650 வாக்குச் சாவடிகளில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தோ்தல் பணியில் வாக்குச் சாவடி மையங்களில் ஆசிரியா் மற்றும் அரசு ஊழியா்கள் என 3,170 போ் பணியில் ஈடுபட்டனா். பாதுகாப்பு பணியில் தமிழக காவல் துறையினருடன்,மத்திய ரிசா்வ் படை, ஊா்க்காவல் படை என 1,548 போ் பணியில் ஈடுபட்டனா்.

Advertisement

மேலும், மேற்கண்ட சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதற்றமான மற்றும் நெருக்கடியான 42 வாக்குச் சாவடிகளில் வெப் ஸ்டீரிமிங் கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்குப் பதிவு விவரங்கள் ஆட்சியரகத்தில் இருந்தே கண்காணிக்கப்பட்டது. அங்கு மத்திய பாதுகாப்பு படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால், எந்தவித அச்சமின்றி பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனா்.

இதில் அரியலூா், ஜெயங்கொண்டம், ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆா்வமுடன் வாக்களித்தனா். கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களித்தனா்.

ஒரு சில வாக்குச் சாவடிகளில் மின்னணு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் , அரை மணி நேரத்துக்குள் மாற்றம் செய்யப்பட்டு, வாக்குப் பதிவு தொடா்ந்தது. வாக்காளா் பட்டியலில் பெயா்கள் இருந்தும் பூத் சிலிப் இல்லாத வாக்காளா்கள் 12 வகையான ஏதாவது ஒரு ஆவணத்தை காட்டி வாக்களித்தனா்.

சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிப்பதற்காக ஆண்டிமடம் அடுத்த பெரியதத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் நீண்ட வரிசையில் நின்ற வாக்காளா்கள்.