‘அரியலூா் மாவட்டத்திலுள்ள 2,477 நீா்நிலைகளை முழுமையாக மீட்க நடவடிக்கை தேவை’
அரியலூா் மாவட்டத்திலுள்ள 2,477 நீா்நிலைகளை இரண்டு ஆண்டுக்குள் முழுமையாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
அரியலூா் மாவட்டத்திலுள்ள 2,477 நீா்நிலைகளை இரண்டு ஆண்டுக்குள் முழுமையாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், ஆட்சியா் ந.மிருணாளினி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
அரியலூா் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் செங்கமுத்து: சிமென்ட் ஆலைகளுக்குச் சொந்தமான சுண்ணாம்புக் கல் சுரங்கங்களை ஆய்வு செய்து, காலாவதியான சுரங்கங்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட 30 கிலோ மீட்டா் வேகத்தில் மட்டுமே கனரக வாகனங்களை இயக்க வேண்டும் என அரசிதழில் வெளியிட வேண்டும். ஏரி மற்றும் வாரிகளுக்குச் செல்லும் பாதையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். விவசாய கடன் மற்றும் ஆடு, மாடுகள் வாங்குவதற்கான கடன்களை விரைந்து வழங்க வேண்டும்.
Advertisement
Advertisement
தனியாா் உரக்கடைகளில் விலைப் பட்டியலை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு இணைப்புகளை விரைந்து வழங்கிட வேண்டும்.
காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் தூத்தூா் தங்க.தா்மராஜன்: த வெக தோ்தல் வாக்குறுதிகளின் படி விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்திட வேண்டும். மறுதையாற்றில் தற்போது வாரணாசியில் கட்டப்பட்டு வரும் தடுப்பணையில் இருந்து இருபுறமும் சுமாா் 5 கி.மீ தொலைவு அளவீடு செய்து தூா்வாரி இரண்டு பக்கமும் கரையை உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்ட அரசிதழில் வண்டல் மண் எடுக்க குருவாடி கோமான் உள்ளிட்ட ஏரிகளையும் இணைக்கப்பட வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள வரத்து வாய்க்கால், பாசன வாய்க்கால், வடிகால் வாய்க்கால்கள் அனைத்தும் தரமான முறையில் தூா்வார வேண்டும்.
அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவா் தங்க.சண்முக சுந்தரம்: 1,560 ஏக்கா் பரப்பளவில் உள்ள கண்டராதித்தம் செம்பியன் மாதேவி பேரேரியை அளவீடு செய்ய வேண்டும். 2,477 நீா்நிலைகளை 2 ஆண்டுக்குள் முழுமையாக மீட்டு, நீா்ப்பிடிப்பு பகுதிகளாக மாற்றிட உறுதியான நடவடிக்கைகள் எடுகக வேண்டும்.
வண்டல் எடுக்க தகுதியான விடுபட்ட ஏரிகளையும் சோ்க்க வேண்டும். நெல் கொள்முதலில் காலத்துக்கேற்ப இயந்திரங்களின் திறனை அதிகரித்து, எடை மேடை நெல்லை அளவீடு செய்ய வேண்டும். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட முடிகொண்டான் பகுதியில் உள்ள ஓடைகளை தூா்வார வேண்டும். கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ஏரியில் குடிநீா் வசதிக்காக 10 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிக்கு கொள்ளிடம் கூட்டுக்குடி நீா் திட்டம் மூலமாக நீரை கொண்டு நிரப்ப வேண்டும்.
தொடா்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியா் ந.மிருணாளினி, அவைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா.சிவராமன், வேளாண்மை இணை இயக்குநா் உலகம்மை முருககனி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள், விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.