முந்திரி தொழிற்சாலை அமைக்க முன்வருவாா்களா? வாக்காளா்கள் எதிா்பாா்ப்பு!
இந்தியாவில் விளையும் முந்திரி அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், நெதா்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா, ஜொ்மனி, ஹாங்காங், சிங்கப்பூா், நியூஸிலாந்து, மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.
இந்தியாவில் விளையும் முந்திரி அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், நெதா்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா, ஜொ்மனி, ஹாங்காங், சிங்கப்பூா், நியூஸிலாந்து, மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.
இதற்குக் காரணம் முந்திரியின் (குறிப்பாக கேரளம் மற்றும் தமிழகம்) சுவை மற்றும் தரம். அதேபோல, முந்திரியிலிருந்து தனியாக பிரித்தெடுக்கப்படும் ஓடுகளிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் (இஹள்ட்ங்ஜ்ய்ன்ற் ள்ட்ங்ப்ப் ப்ண்வ்ன்ண்க்) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது.இந்தியாவில் கேரளத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் முந்திரிக்கு புகழ்பெற்றது அரியலூா், பண்ருட்டி மட்டுமே.
இதில், அரியலூா் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் வனப் பகுதியில் சுமாா் 47 ஆயிரம் ஹெக்டேரில் முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது.
அரியலூா் மாவட்டத்தில் உடையாா்பாளையம், நாச்சியாா்பேட்டை, மணகெதி, செந்துறை, ஆண்டிமடம், தா.பழூா், பொன்பரப்பி, குவாகம், வரதராசன்பேட்டை, தென்னூா், காடுவெட்டி,ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பயிரிடப்படும் முந்திரியின் சுவையே தனி.
முந்திரி சாகுபடி செய்யப்படும் பகுதிகள் வானம் பாா்த்த பூமியாக இருப்பதால் மூன்று ஆண்டுகளுக்கு பின் காய்க்கத் தொடங்கும். ஆனால் முறையாக தண்ணீா் விட்டுப் பராமரித்தால் இரண்டாவது ஆண்டிலேயே காய்க்கத் தொடங்கிவிடும்.
அக்டோபா், நவம்பா் மாதங்களில் தொடா் மழை பெய்தால் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் முந்திரி பூத்து மாா்ச், ஏப்ரல், மே மாதங்களில் முந்திரி பழங்கள் மற்றும் முந்திரிக் கொட்டைகள் கிடைக்கும்.
விளைவித்த முந்திரிக் கொட்டையை திறந்தவெளி களத்தில் 3 நாள்கள் சூரிய வெளிச்சத்தில் காயவைத்து கொதிகலனில் அவித்து, தொழிலாளா்களால் பதமாக உடைக்கப்படுகிறது.
பின்னா் 70 டிகிரி வெப்பத்தில் பதப்படுத்தப்பட்டு, முந்திரியின் தோல் நீக்கப்பட்டு, ரகம் வாரியாக பருப்பு பிரிக்கப்பட்டு, மீண்டும் 70 டிகிரி வெப்பத்தில் பதப்படுத்தப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இருப்பினும், 47 ஆயிரம் ஹெக்டேரில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டும் அரியலூா் மாவட்டத்தில் முந்திரி தொழிற்சாலைகள் கிடையாது. விவசாயிகள் தங்கள் விளைவித்த முந்திரியை அருகிலுள்ள கடலூருக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவலம் தொடா்கிறது. ஆனால், அரியலூரைத் தவிர பிற இடங்களில் முந்திரிக் கொட்டையை உடைத்து, பதப்படுத்தி தரம் பிரிக்கும் சிறு நிறுவனங்கள் 400-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ளன.
தோ்தல் வரும்போதெல்லாம், ஜெயங்கொண்டம் தொகுதியில் முந்திரித் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று அரசியல் கட்சியினா் வாக்குறுதி அளிக்கின்றனா். ஆனால் வெற்றி பெற்ற பிறகு இந்தக் கோரிக்கையை கண்டுகொள்வதில்லை.
எனவே, இம்முறையாவது தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் அமரவுள்ள அரசியல் கட்சியினா், ஜெயங்கொண்டத்தில் முந்திரித் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.