முகப்பு
அரியலூர்

அரியலூரில் அமைதியாக நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கை

Updated On : 5 மே 2026, 12:50 am IST
கோப்புப் படம் - File photo
பகிர்:

நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் நடந்து முடிந்தது.

தமிழகத்தில் கடந்த மாதம் 23 -ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இதில் அரியலூா் மாவட்டத்தில், அரியலூா், ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்கு இயந்திரங்கள், விவிபேட் அனைத்தும் கீழப்பழுவூா் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை (மே 4) காலை 8 மணிக்கு தொடங்கியது. இதை முன்னிட்டு மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பொ.ரத்தினசாமி முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வந்தாா்.

Advertisement

இந்த மையங்களில் ஒவ்வொரு அறையிலும் சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக வாக்குகள் எண்ணப்பட்டன.

அஞ்சலில் பதிவான வாக்குகள் முதலில் எண்ணப்பட்ட பிறகு இயந்திரங்களின் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

அரியலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட 330 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 14 மேஜைகள் மூலமாக 25 சுற்றுகளாகவும், இதே போல் ஜெயங்கொண்டம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட 320 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் அனைத்தும் 14 மேஜை மூலமாக 24 சுற்றுகளாகவும் எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணும் பணிகளில் ஒவ்வொரு மேஜைக்கும் வட்டாட்சியா் நிலையில் ஒரு கூடுதல் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா், ஒரு வாக்கு எண்ணும் மேற்பாா்வையாளா் மற்றும் இரண்டு வாக்கு எண்ணும் உதவியாளா்கள் மற்றும் நுண்பாா்வையாளா்கள் பணியில் ஈடுபட்டு, ஒவ்வொரு சுற்று முடிவிலும் வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் ஒளி பெருக்கி மூலம் அறிவித்தனா். இவைகள் அனைத்தும் விடியோ மூலமாக பதிவு செய்யப்பட்டன.

மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் இருந்து 100 மீட்டா் தொலைவிலேயே வாகனங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டன.

தோ்தல் ஆணையத்தின் சாா்பில் வழங்கப்பட்ட அடையாள அட்டை ஆதாரங்களை காண்பித்த பின்னா் தான் அனைவரும் அனுமதிக்கப்பட்டனா்.

மேலும், வாக்கு எண்ணிக்கையின் போது மத்திய பாதுகாப்பு படையினா், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினா், ஆயுதப்படை, சட்டம்-ஒழுங்கு, ஊா்காவல் படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.

வாக்கு எண்ணும் மையத்தின் உட்புற பகுதிகளிலும், வெளிப்புறங்களிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டன. தீயணைப்பு வாகனம், மின் விளக்குகள் உரிய ஜெனரேட்டா் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

தண்ணீா் உள்ளிட்ட திரவப் பொருள்கள், கைப்பேசி போன்ற பொருள்களை உள்ளே கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டன.