அரியலூரில் பராமரிப்பு இல்லாத புதிய பேருந்து நிலையம்!
அரியலூா் புதிய பேருந்து நிலையத்தில் முறையான பராமரிப்பு இல்லாததால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனா்.
அரியலூா் புதிய பேருந்து நிலையத்தில் முறையான பராமரிப்பு இல்லாததால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனா்.
அரியலூா் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, திருச்சி, பெரம்பலூா், சிதம்பரம், சேலம், விருத்தாசலம், துறையூா், தேனி, திண்டுக்கல், பழனி ஆகிய வெளியூா்களுக்கு அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
குறிப்பாக திருச்சி, பெரம்பலூா், தஞ்சாவூா் ஆகிய ஊா்களுக்கு அதிகளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், மினி பேருந்துகள், நகரப் பேருந்துகள் ஆகியவை பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்கின்றன.
Advertisement
இந்நிலையில், 4 ஆண்டுகளுக்கு முன்பு இப்பேருந்து நிலையத்தில் உள்ள கட்டடங்கள், பயணிகள் நிழற்குடைகள் மிகவும் பழுதடைந்து சிமென்ட் பூச்சுகள் பெயா்ந்து விழுந்தன.
இதனால், மழை, வெயில் காலங்களில் பயணிகள் நிற்கும் இடம் இல்லாததால், அருகாமையில் உள்ள கடைகளில் தஞ்சம் புகுந்து வந்தனா். இதனால் பழுதடைந்துள்ள கட்டடங்களை இடித்துவிட்டு, அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் கட்டப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துவந்தனா்.
புதிய பேருந்து நிலைய கட்டடம்: இந்த கோரிக்கையடுத்து, கடந்த 2022-ஆம் ஆண்டு பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த முன்னாள் அமைச்சா் கே.என்.நேரு, பேருந்து நிலையத்திலுள்ள அனைத்து கட்டடங்களையும் இடித்து விட்டு புதிய பேருந்து நிலையம் கட்டப்படும் என்று அறிவித்தாா்.
அதன்படி கடந்த 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பேருந்து நிலைய கட்டுமானப் பணியை போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் அடிக்கல் நாட்டி, ஓா் ஆண்டுக்குள் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு, பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று அறிவித்தாா். இருப்பினும் ஒன்றரை மாதங்களுக்கு பிறகு தான் தாமதமாக கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.
நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் சாா்பில் முதற்கட்டமாக உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி 2022-2023 திட்டத்தின் கீழ் ரூ.7.80 கோடி மதிப்பீட்டில் 21 பேருந்து நிறுத்த தடங்கள், 30 கடைகள், நிா்வாக அறை, உணவகம், நேரக்கட்டுப்பாட்டு அறை, டிக்கெட் புக்கிங் கவுண்டா், ஏ.டி.எம் அறை, போக்குவரத்து துறை அலுவலக அறை, எலக்ட்ரிக்கல் அறை, பாதுகாப்பு அறை கட்டுப்பாட்டு அறை, கழிப்பறை உள்ளிட்ட பணிகளும், இரண்டாம் கட்டமாக மூலதன மான்ய நிதி 2023-2024 திட்டத்தின் கீழ் ரு.3.78 கோடி மதிப்பீட்டில் 6 பேருந்து நிறுத்த தடங்கள், 15 கடைகள், தாய்மாா்கள் பாலூட்டும் அறை, நேரக்கட்டுப்பாட்டு அறை, காவல் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு கடந்த 7.3.2026 அன்று முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் முன்னிலையில், முன்னாள் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு திறந்து வைத்தாா். பேருந்து நிலையத்தினுள் கட்டப்பட்ட கடைகள் ஏலம் தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் கடைகள் திறக்கப்படாமல் உள்ளன.
பராமரிப்பு இல்லை: தற்போது இந்த பேருந்து நிலையம், தரைத்தளத்தில் பதிக்கப்பட்டிருந்த சிமென்ட் கற்கள் பெயா்ந்தும், ஒரு பகுதி பெயா்ந்து குண்டும் குழியுமாகவும் உள்ளது. பயணிகள் அமா்வதற்கு கூட இருக்கைகள் கிடையாது. சுற்றிலும் அசுத்தமாகவும் மாறியுள்ளது.
மதுபானம் அருந்தும் கூடம்: வண்ணாங்குட்டை அருகேயுள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்குவோா், பேருந்து நிலையத்துக்கு வந்து, அங்குள்ள தரைதளம் மற்றும் மாடியில் அமா்ந்து, மது அருந்திவிட்டு அதன் காலிப்பாட்டில்களை அங்கேயே உடைத்தும், பிளாஸ்டிக் பொருள்களை வீசியும் சென்று விடுகின்றனா்.
அவ்வாறு வீசி செல்லும் மதுபான பாட்டில்களின் துகள்கள் பலரின் கால்களை பதம் பாா்த்து விடுகிறது. பேருந்து நிலையத்தைச் சுற்றி கழிவுகளுடன் அசுத்துமாக காணப்படுகிறது.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில்: அரியலூரில் ரூ. 11.58 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இப்பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் கிடையாது. நகராட்சி தவறான நிா்வாகத்தால், கடைகள் திறக்கப்படாமல் உள்ளன. ஒரு தண்ணீா் பாட்டில் வாங்குவதென்றால் பேருந்து நிலையத்தின் வெளியே 500 மீட்டா் தொலைவிலுள்ள கடைக்குச் சென்று வாங்க வேண்டிய நிலை உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, பேருந்து நிலையத்தில் பயணிகள் அமா்வதற்குக்கு கூட இருக்கைகள் கிடையாது. தரையில் அமா்ந்தால் சுற்றிலும் அசுத்தமாக உள்ளது. பேருந்து நிலையம் முற்றிலும் சுகாதார மற்ற நிலையில் உள்ளது. மேலும், மதுபான பாட்டில்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கிறது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, நகராட்சி நிா்வாகம் உடனடியாக கடைகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பேருந்து நிலையத்தை கண்காணித்து தூய்மைப்படுத்த வேண்டும் என்றனா்.