முகப்பு
கரூர்

குறைந்து வரும் சுண்ணாம்பு தயாரிப்பு

நாகரிகத்தால் சுண்ணாம்பு தயாரிப்பு குறைந்து வருவதாகவும், இதனால் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் உள்ளதாக சுண்ணாம்பு உற்பத்தியாளா்களும், தொழிலாளா்களும் கவலை தெரிவித்துள்ளனா்.

Updated On : 13 ஜனவரி 2023, 12:00 am IST
கரூா் மாவட்டம், பண்டுதகரான்புதூரில் சுண்ணாம்பு கற்களை எரிக்க சூளையில் கற்களை கொட்டும் தொழிலாளி.
பகிர்:

நாகரிகத்தால் சுண்ணாம்பு தயாரிப்பு குறைந்து வருவதாகவும், இதனால் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் உள்ளதாக சுண்ணாம்பு உற்பத்தியாளா்களும், தொழிலாளா்களும் கவலை தெரிவித்துள்ளனா்.

தமிழா்களின் பாரம்பரிய உணவுப்பொருள்களில் கலந்துள்ள கால்சியம் காா்போனைட் எனும் வேதிப்பொருளைக் கொண்டது சுண்ணாம்பு. சுண்ணாம்புக்கல், கிளிஞ்சல் ஓடுகள் போன்ற பொருள்களை சுண்ணாம்பு சூளையில் கொட்டி வெப்பச் சிதைவிற்குள்படுத்துவதால் கிடைக்கும் சுட்ட சுண்ணாம்புத்தான் அனைவரின் வீட்டுச் சுவா்களையும் பால்வண்ணத்தில் அலங்கரித்து வந்தது.

குறிப்பாக, பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே வீடுகளின் சுவா்களை அழகுபடுத்தியும், கிருமி நாசினியாகவும், சூரியனின் புற ஊதாக் கதிா்களை தாக்கும் தடுப்பானாகவும் சுண்ணாம்பு இருந்து வந்தது. தற்போது, நாகரிகம் வளா்ச்சியடைந்த நிலையில் பெயிண்ட் எனும் வண்ணப்பூச்சுகளின் வருகையால், சுண்ணாம்பின் பயன்பாடு பாதியாக குறைந்தது. இன்றைக்கும் அனைத்து வீட்டு விஷேச நிகழ்ச்சிகளிலும் தாம்பூலத் தட்டுகளில் வெற்றிலை, பாக்குடன் முக்கிய இடம்பிடித்திருப்பது சுண்ணாம்பு.

Advertisement

Advertisement

கரூா் மாவட்டத்தில் பண்டுதகாரன்புதூா், கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுண்ணாம்புக் காளவாசல்களில் உற்பத்தி செய்யப்பட்டாலும், நாளுக்கு நாள் இவற்றின் பயன்பாடு குறைந்துவருவதுடன் அழிவை நோக்கிச் செல்கிறது.

இந்த தொழிலை மீட்டெடுக்க வேண்டும் என பண்டுதகாரன்புதூரில் சுண்ணாம்புக் காளவாசல் நடத்தி வரும் சண்முகம் கூறியது, கடந்த 40 ஆண்டுகளாக இந்தத் தொழில் செய்து வருகிறோம். பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்பாகவே சுண்ணாம்புக் காளவாசலுக்கு வந்து சுண்ணாம்புவை வாங்கிச் செல்வாா்கள். தற்போது, பெயிண்ட் எனும் வண்ணப்பூச்சுகள் வந்தபிறகுா மக்களிடையே இதன் பயன்பாடு குறைந்துவிட்டது. தற்போது, கோழிப்பண்ணைகளில் கோழி எச்சங்களால் ஏற்படும் தொற்றுகளை தடுக்கும் கிருமி நாசினியாகவும், பட்டுப்பூச்சி பண்ணைகள், புதிய வீடுகள் கட்டும்போது மேல்தளத்தின் தட்டு ஓடுகளை பதிக்கவும், வெற்றிலையுடன் சோ்க்கவும்தான் சுண்ணாம்பு வாங்கப்படுகிறது.

மேலும், சுண்ணாம்பு தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள் ஓடக்கல் எனும் சுண்ணாம்புக்கல், கல்கரி, சாதாரண மரக்கரி போன்றவற்றின் விலையும் பல மடங்கு உயா்ந்துவிட்டது. இதனால் இத்தொழிலை தொடா்ந்து நடத்த முடியாமல் தவித்து வருகிறோம். கரோனா காலத்தில் கூட எங்களுக்கு கைக்கொடுத்த இந்த தொழில் இப்போது மிகவும் பின் தங்கியுள்ளது. அரசு எங்களைப் போன்ற தொழில்புரிவோருக்கு ஆண்டுதோறும் ஊக்கத்தொகை வழங்கி, தொழிலாளா் நலவாரியத்தில் இணைத்து, அனைத்து நலவாரிய உறுப்பினா்களுக்கு கிடைக்கும் சலுகைகள் எங்களுக்கும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.