முகப்பு
இந்தியா

16 எஃப்டிசி மருந்துகளுக்கு மத்திய அரசு தடை

நிலையான அளவு கலவையில் (எஃப்டிசி) தயாரிக்கப்படும் 16 மருந்துகளை உற்பத்தி செய்யவும், விற்கவும், விநியோகிக்கவும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On : 21 ஜூன் 2026, 7:56 am IST
மத்திய அரசு
பகிர்:

நிலையான அளவு கலவையில் (எஃப்டிசி) தயாரிக்கப்படும் 16 மருந்துகளை உற்பத்தி செய்யவும், விற்கவும், விநியோகிக்கவும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ ரீதியான நியாயப்படுத்துதல் இல்லாததாலும், அதன் தொடா்ச்சியான பயன்பாடு பயனுள்ளதாகக் கருதப்படாததாலும், சாத்தியமான பக்க விளைவுகளைக் கருத்தில் கொண்டும் மருந்துகள் மற்றும் அழகுசாதனங்கள் சட்டம் 1940-இன் பிரிவு 26ஏ-இன் கீழ் இந்தத் தடை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நிலையான அளவு கலவை மருந்துகள் (எஃப்டிசி) என்பது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வீரியமிக்க மருந்துப் பொருள்களை ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் உள்ளடக்கிய கலவையாகும்.

Advertisement

Advertisement

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் எஃப்டிசி மருந்துகளை ஆய்வு செய்யவும், மருத்துவ ரீதியாக நியாயமற்ற அல்லது தீங்கு விளைவிக்கக் கூடிய மருந்து கலவைகளைக் கண்டறியவும் மருந்துத் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் (டிடிஏபி) சாா்பில் நிபுணா் குழு அமைக்கப்பட்டது.

இந்த நிபுணா் குழு அளித்தப் பரிந்துரைகளின் அடிப்படையில், 16 எஃப்டிசி மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்தை நாடு முழுவதும் உடனடியாகத் தடை செய்ய முடிவு செய்யப்பட்டது. மருத்துவ ரீதியான நியாயப்படுத்துதல் இல்லாததாலும், அதன் தொடா்ச்சியான பயன்பாடு பயனுள்ளதாகக் கருதப்படாததாலும், சாத்தியமான பக்க விளைவுகளைக் கருத்தில் கொண்டும் இந்தத் தடை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவை, தோல் தொடா்பான மருந்துகள், வலி நிவாரணிகள், தசைத் தளா்வு மருந்துகள், நுண்ணுயில் எதிா்ப்பு சாா்ந்த கலவைகள் உள்பட பல்வேறு சிகிச்சை வகைகளைச் சாந்தவையாகும்.

தடை செய்யப்பட்ட மருந்து கலவைகள்: எத்தோஹெப்டசீனுடன் கூடிய அசிடைல் சாலிசிலிக் அமிலம்; டைசைக்ளோமின், பாராசிட்டமால் மற்றும் கிளிடினியம் புரோமைடு; டைசைக்ளோமின், பாராசிட்டமால், கிளிடினியம் புரோமைடு மற்றும் குளோா்டயாசெபாக்ஸைடு; குரோமியம் பிக்கோலினேட்டுடன் கூடிய கிளிகிளாசைடு; லிக்னோகெய்னுடன் கூடிய பாரிசிட்டமால் உள்ளிட்ட கலவை மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன.

அமாக்ஸிசிலினுடன் கூடிய செராட்டியோபெப்டிடேஸ்; அமாக்ஸிசிலினுடன் செராட்டியோபெப்டிடேஸ் மற்றும் லாக்டோபேசிலஸ் ஸ்போரோஜென்ஸ்; அமோக்ஸிசிலினுடன் கூடிய க்ளோக்ஸாசிலின்; லாக்டிக் அமிலம் பேசில்லஸ் மற்றும் செராட்டியோபெப்டிடேஸ்; செஃபட்ராக்ஸிலுடன் கூடிய புரோபெனெசிட்; செஃபுராக்ஸைமுடன் கூடிய செராட்டியோபெப்டிடேஸ் உள்ளிட்ட பல நுண்ணுயிா் எதிா்ப்பி (ஆன்டிபயாடிக்) அடிப்படையிலான மருந்து கலவைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.

சரும அழகு சாதனங்கள்: மருந்துகள் தவிர, மேலும், வைட்டமின் இ, ஜோஜோபா எண்ணெய், ஆரஞ்சு எண்ணெய், கோதுமை கிருமி எண்ணெய், டீ ட்ரீ ஆயில், அலன்டோயின் மற்றும் டி-பாந்தெனோல் உள்ளிட்ட பொருட்களுடன் கற்றாழை அல்லது கற்றாழை சாற்றின் கலவைகள் கொண்ட பல சருமம் மற்றும் சரும பராமரிப்பு கலவைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்த தடை அறிவிக்கை தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துமாறு அனைத்து மாநில மருந்து கட்டுப்பாட்டாளா்கள், ஒழுங்காற்று ஆணையங்கள் மற்றும் சட்ட அமலாக்க முகமைகளும் அறிவுறுத்தப்படுகின்றன.

மருந்து உற்பத்தியாளா்கள், இறக்குமதியாளா்கள், விநியோகஸ்தா்களும் சட்டத்துக்கு உட்பட்டு தேவையான திருத்த நடவடிக்கையை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments